இரட்டை குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து ஜம்மு பகுதியில் பலத்த பாதுகாப்பு

இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து ஜம்மு பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-09-29 16:07 GMT

image courtesy: PTI

ஜம்மு,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு நடத்தியதை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் மோப்ப நாய்களுடன் அங்குள்ள மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து முனையத்தில் விரிவான சோதனை நடத்தினர். குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ஜம்மு பகுதியில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக உதம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டொமைல் சவுக்கில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் குண்டுவெடித்தது. இந்த நிலையில் இந்த சம்பவங்களைத் தொடர்ந்து கத்ரா மற்றும் ராம்நகர் நகரங்களில் யாத்ரீகர்கள், உள்ளூர்வாசிகள் மற்றும் பயணிகள் சந்தேகத்திற்குரிய பொருள்கள் மற்றும் நபர்கள் மீது ஒரு கண் வைத்துக்கொள்ளுமாறு ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட போலீஸ் வாகனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டனர்.

ஜம்மு நகரின் பேருந்து நிலையப் பகுதியில் மோப்ப நாய்களுடன் ஆயுதம் ஏந்திய ஜம்மு காஷ்மீர் போலீசாரின் சிறப்பு நடவடிக்கைக் குழு சோதனைகள் மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, நகருக்குள் வரும் வாகனங்கள் பல்வேறு சோதனைச் சாவடிகள் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

கத்ரா நகரில், திரிகூட மலையில் அமைந்துள்ள மாதா வைஷ்ணோ தேவி குகை ஆலயத்தின் அடிப்படை முகாமில், நவராத்திரியின் போது யாத்திரை சுமூகமாக நடைபெறுவதை உறுதிசெய்ய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குகைக் கோயிலில் தரிசனம் செய்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வந்து செல்கின்றனர்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி ரஜோரியில், பேரணியில் உரையாற்ற உள்ளார். நிகழ்வு நடைபெற உள்ள இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்