பாதுகாப்பு பணிக்கு மத்தியில் அமர்நாத் பக்தர்களுக்கு மருத்துவ சேவை செய்து வரும் ராணுவ வீரர்கள்!
ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உடல்நிலை சரியில்லாமல் இருந்த 50 க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கி உதவியுள்ளனர்.
ஸ்ரீநகர்,
இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகையில், சிவபெருமான் ஒவ்வொரு ஆண்டும், ஒரு பனி சிவலிங்க வடிவத்தை எடுப்பதாக கூறப்படுகிறது. இதனை கண்டு தரிசிக்க பல்லாயிரம் பேர் அமர்நாத் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.
கடல் மட்டத்திலிருந்து 3,880 மீட்டர்(சுமார் 13,000 அடி உயரம்) உயரத்தில் இமயமலையின் மேல் பகுதியில், உள்ள சிவபெருமானின் குகைக் கோயிலுக்கு அமர்நாத் புனித யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். 2 ஆண்டு இடைவெளிக்கு பின்னர், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணிகளில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ஐ.டி.பி.பி) வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஆக்ஸிஜன் தேவைப்படும் யாத்ரீகர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஜூலை 2 வரை ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உடல்நிலை சரியில்லாமல் இருந்த 50 க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களுக்கு ஆக்ஸிஜன் ஆதரவை அவர்கள் வழங்கி உதவியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமர்நாத் குகையை நோக்கி பயணிக்கும் பாதையில், ஷேஷ்நாக் (12,324 அடி) வழியாக மஹாகன்ஸ் உச்சிக்கு (14,000 அடி) செல்லும் பாதையில் பயணிக்கும்போது பக்தர்களுக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்படும். ஆகவே அந்த வழித்தடத்தில் பல வீரர்கள் ஆக்சிஜனுடன் நின்று பக்தர்களுக்கு உதவி வருகின்றனர்.
மேலும், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிப்பது மற்றும் அவர்களை ஸ்ட்ரெச்சரில் ஏற்றி ஷெஷ்நாக் முகாமுக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பல உதவிகளை செய்து வருகின்றனர்.
2019 ஆம் ஆண்டில் அமர்நாத் யாத்திரையின் போது, ஆபத்தான நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளை பக்தர்கள் கடக்க ஏதுவாக, அவர்கள் மீது கற்கள் விழாமல் பாதுகாக்க, ஐ.டி.பி.பி வீரர்கள் கேடயமாக வழிநெடுகிலும் நின்று உதவினர் என்பது குறிப்பிடத்தக்கது.