அரசு பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை தொடங்க வேண்டும்
கர்பூரு, ராச்சமானஹள்ளியில் உள்ள அரசு பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை தொடங்க வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனேக்கல்-
கிராம சபை கூட்டம்
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகாவிற்கு உட்பட்ட கர்பூரு கிராம பஞ்சாயத்தில் நேற்று கிராம சபை கூட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மேலும் சிறுவர்-சிறுமிகள் பங்கேற்ற குழந்தைகள் கிராம சபை கூட்டமும் நடந்தது. இதில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள் தங்கள் குறைகளை எடுத்துக்கூறினர். அதில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய குறைகளை முன்னுரிமை அடிப்படையில் செய்து கொடுக்க வேண்டும் என்று கிராம பஞ்சாயத்து ஊழியர்களுக்கு தலைவர் உத்தரவு பிறப்பித்தார். பின்னர் கர்பூரு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பி.யூ. கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு திறமையை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
கோரிக்கை இந்த சந்தர்ப்பத்தில் ஒரு முதியவர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசு பள்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறை என்பதால் சில சமூக விரோதிகள் நுழைந்து மது அருந்தி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம பஞ்சாயத்து தலைவர் தெரிவித்தார்.
இதையடுத்து அரவண்டிகேபுரா, ராச்சமானஹள்ளி கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளை புனரமைக்க வேண்டும், அந்த பள்ளிகளில் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கர்பூரு, ராச்சமானஹள்ளியில் உள்ள அரசு பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
நலத்திட்ட உதவிகள்
கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட கிராம பஞ்சாயத்து தலைவர் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் கிராம பஞ்சாயத்தில் இருந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.