மைக்ரோசாப்ட் சர்வர் முடக்கம்: சேவைகளை மீட்டெடுக்க நிபுணர்கள் படை விரைவு
தகவல் தொழில்நுட்ப சேவைகளை மீட்டெடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது நூற்றுக்கணக்கான என்ஜினீயர்களை அனுப்பி உள்ளது.;
புதுடெல்லி,
அமெரிக்காவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்டின் தொழில்நுட்ப சேவை கடந்த 18-ந் தேதி பாதிக்கப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் 85 லட்சத்துக்கும் அதிகமான கணினி சாதனங்கள் செயலிழந்தன. அவற்றின் வழியாக வழங்கப்பட்ட போக்குவரத்து, வணிகம், அலுவல் பணிகள் போன்றவையும் முடங்கின. இதனால் தமிழகம் வர இருந்த விமானங்கள் உள்பட பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டன. வர்த்தகமும் முடங்கியது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன், இணைய பாதுகாப்பு சேவைக்காக இணைந்து செயலாற்றும் 'கிரவுடுஸ்டிரைக்' என்னும் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஏற்பட்ட கோளாறுகளே இந்த சேவை முடக்கத்துக்கு காரணம் என தெரியவந்தது. அந்த நிறுவனம், சில மேம்பாட்டு பணிகளை செய்தபோது, அதன் சூப்பர் கம்ப்யூட்டர்கள் 'ரீஸ்ட்டார்ட்' ஆனதால் இந்த செயலிழப்பு ஏற்பட்டதாக தெரியவந்தது.
இதனால் உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் அசூர், ஆபீஸ் 365 சேவைகளை பயன்படுத்தும் நிறுவனங்களின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கின. பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள், தனிநபர்கள் பயன்படுத்தும் மைக்ரோசாப்ட் மென்பொருளில் இயங்கும் கணினி, மடிக்கணினிகளில் நீல திரை தோன்றி, 'கணினி செயலிழந்துள்ளது' என்பதை காட்டியது.
இதையடுத்து அதன் கோளாறுகளை சரி செய்து சேவைகளை மீட்டெடுக்க, மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களது நூற்றுக்கணக்கான என்ஜினீயர்கள் மற்றும் நிபுணர்களை கொண்ட தொழில்நுட்ப படையை அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் மூலம் சீரமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.