கூட்டணி குறித்து பிரதமர் மோடியுடன் பேசியது உண்மை தான்; தேவேகவுடா பரபரப்பு பேச்சு

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைப்பது குறித்து பிரதமர் மோடியுடன் நான் பேசியது உண்மை தான் என்று தேவேகவுடா கூறியுள்ளார்.

Update: 2023-09-10 18:45 GMT

பெங்களூரு:

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா-ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைப்பது பற்றி முன்னாள் பிரதமர் தேவேகவுடா, பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும், எங்கள் கூட்டணியில் கர்நாடகத்தில் 4 தொகுதிகளில் ஜனதாதளம் (எஸ்) கட்சி போட்டியிடும் என்றும் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா கூறியிருந்தார்.

ஆனால் இதுபற்றி ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் தேவேகவுடா, குமாரசாமி ஆகியோர் பதில் கூறாமல் இருந்தனர். இந்த நிலையில், கூட்டணி பற்றி பிரதமருடன் பேசியது உண்மை என்று தேவேகவுடா கூறி மவுனம் கலைத்தார்.

அதாவது நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மாநாடு பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. தேவேகவுடா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம், சட்டசபை கட்சி தலைவர் குமாரசாமி மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேசியதாவது:-

சட்டசபை தேர்தலில் நமக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. மாநில கட்சியான ஜனதா தளம் (எஸ்) கட்சியை காப்பாற்ற வேண்டியுள்ளது. அதனால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பிரதமர் மோடியுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை தான். நம்மை பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் நன்றாக மதிக்கிறார்கள். என் மீது மோடி மிகுந்த மரியாதை வைத்துள்ளார். அதனால் கூட்டணி குறித்து பிரதமர் மோடியுடன் பேசினேன்.

கர்நாடகத்தில் நமது கட்சியின் பலம் என்ன, எந்தெந்த தொகுதிகளில் நமக்கு செல்வாக்கு உள்ளது என்பது குறித்து அவரிடம் விரிவாக கூறினேன். எத்தனை தொகுதி வேண்டும் என்று நான் கேட்கவில்லை. தொகுதிகள் குறித்து மோடியுடன் குமாரசாமி பேசி முடிவு செய்வார். நமக்கு எத்தனை தொகுதி கிடைக்கிறதோ அத்தனை தொகுதிகளிலும் நான் நாற்காலியில் சென்று பிரசாரம் செய்ய தயாராக உள்ளேன்.

ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு கொள்கை இல்லை என்று விமர்சிக்கிறார்கள்.

அப்படி என்றால் மேற்கு வங்காளத்தில் அந்த கட்சிகளுக்கு என்ன கொள்கை உள்ளது?. அதனால் கொள்கை பற்றி எங்களை விமர்சிக்க காங்கிரசுக்கு தகுதி இல்லை. எங்கள் கட்சிக்கு பலம் இல்லை என்று பா.ஜனதாவினர் கருதக்கூடாது. பீதர், விஜயாப்புராவிலும் எங்கள் கட்சிக்கு பலம் உள்ளது. கூட்டணி குறித்து பிரதமர் மோடியும், குமாரசாமியும் இறுதி முடிவு எடுப்பார்கள். கட்சியை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பா.ஜனதாவுடன் கூட்டணி குறித்து பேசுகிறேன்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மைசூரு தொகுதியை விட்டு கொடுக்குமாறு காங்கிரசிடம் கேட்டோம். ஆனால் அதை சித்தராமையா விட முடியாது என்று கூறிவிட்டார். என்னை துமகூரு தொகுதியில் நிற்குமாறு வந்து காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். என்னை வெற்றி பெற வைப்பதாக பரமேஸ்வர் கூறினார். ஆனால் தேர்தலில் தோற்று போனேன். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது நான் எம்.பி.யாக இருந்தேன்.

அப்போது மக்களவை, மாநிலங்களவையில் எனக்கு 2, 3 நிமிடங்கள் தான் பேச அனுமதி அளிப்பார்கள். நான் எப்போதும் விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து பேசினேன். அதனால் எனக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இவ்வாறு தேவேகவுடா பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்