12-ந் தேதிக்கு பிறகு தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறப்பு சாத்தியமில்லை - சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு தகவல்

தமிழகத்துக்கு செப்டம்பர் 12-ந் தேதிக்கு பிறகு காவிரி நீரை திறந்துவிடுவது சாத்தியமில்லை என சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள கூடுதல் விளக்க மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-07 00:11 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட உத்தரவிடக்கோரும் தமிழ்நாடு அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக அரசு நீர்வளத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராகேஷ் சிங் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள கூடுதல் விளக்க மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டுக்கு நாள்தோறும் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை ஆகஸ்டு 29-ந் தேதி முதல் திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டத்தில் கர்நாடகத்துக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்து நாளொன்றுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக குறைக்குமாறு கோரி ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் ஆகஸ்டு 19-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 3-ந் தேதி வரை சராசரியாக வினாடிக்கு 37,869 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 7,869 கனஅடி நீர் கூடுதலாகவே திறக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 740 டி.எம்.சி. நீரை திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை கொண்டு பற்றாக்குறையை நீர் ஆண்டின் இறுதியில் கணக்கிட வேண்டுமே தவிர, தமிழ்நாடு அரசு கூறுவது போல மாதந்தோறும் கணக்கிட கூடாது.

காவிரி, கிருஷ்ணா பாசனப் பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது. எனவே, காவிரி ஆணையத்தின் ஆகஸ்டு 29-ந் தேதி உத்தரவை நிறைவேற்றிய பிறகு, கர்நாடக அணைகளில் இருந்து செப்டம்பர் 12-ந் தேதிக்கு பிறகு தமிழகத்துக்கு நீர் திறப்பது சாத்தியமில்லை.

காவிரி நீர் ஆணையத்தின் உத்தரவு நியாயமற்றதாக அல்லது முரணாக இருக்கும்போது மட்டுமே அதை ரத்து செய்ய முடியும். காவிரி நீர் ஆணையத்தின் உத்தரவில் உள்ள முரணை அல்லது முறைகேட்டை தமிழ்நாடு அரசு எடுத்துக்காட்டவில்லை. அதேசமயம் கர்நாடகத்தில் நிலவும் சூழலை ஆணையம் கருத்தில்கொள்ளாமல் பிறப்பித்துள்ள உத்தரவை மறுஆய்வு செய்ய மனு தாக்கல் செய்துள்ளோம்.

நாள்தோறும் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி நீரை திறக்க உத்தரவிடக் கோரும் தமிழ்நாடு அரசின் கோரிக்கை முற்றிலும் நியாயமற்றது என்பதாலும், வழக்கமான மழைப்பொழிவு என கருதியுள்ளதாலும் தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்