பணமதிப்பிழப்பு விவகாரம்; சட்டவிரோதம், முறைகேடுகளை சுட்டி காட்டிய சுப்ரீம் கோர்ட்டின் மாறுபட்ட தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: ப. சிதம்பரம்
பணமதிப்பிழப்பு விவகாரத்தில் சட்டவிரோதம் மற்றும் முறைகேடுகளை மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி சுட்டி காட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது என முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். இதன் வாயிலாக, புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன.
அதற்கு மாற்றாக, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக விவேக் நாராயண் சர்மா உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இந்த ரிட் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த டிசம்பர் 22-ந்தேதி ஒத்திவைத்தது.
இந்த நிலையில் நீதிபதிகள் எஸ். அப்துல் நசீர், பி.ஆா். கவாய், பி.வி. நாகரத்னா, ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் இன்று தீர்ப்பு அளித்தனர். இதில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானதே எனவும் அந்த நடவடிக்கையை திரும்ப பெற முடியாது என கூறி எதிரான 58 மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
பெரும்பான்மையான நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து நீதிபதி பி.வி. நாகரத்னா வழங்கிய தீர்ப்பில் ரிசர்வ் வங்கி சட்ட விதிகளின்படி, மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது. சட்டம் இயற்றியே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். ரகசியம் தேவையென்றால் அவசர சட்டம் மூலம் கொண்டு வந்திருக்கலாம்.
நாடாளுமன்றம் என்பது இன்னொரு வடிவம். முக்கியமான நடவடிக்கையில் ஜனநாயகத்தின் மையப்புள்ளியான நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் முடிவெடுக்க முடியாது என தெரிவித்தார்.
அவரது இந்த தீர்ப்புக்கு முன்னாள் மத்திய நிதி மந்திரியான ப. சிதம்பரம் வரவேற்பு தெரிவித்து உள்ளார். எனினும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து விட்டால், அதனை நாம் பணிவுடன் ஏற்று கொண்டேயாக வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி முன்னாள் மத்திய நிதி மந்திரியான ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்த பணமதிப்பிழப்பு விவகாரத்தில் சட்டவிரோதம் மற்றும் முறைகேடுகளை மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி சுட்டி காட்டியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது
இது அரசின் மணிக்கட்டு பகுதியில் மட்டுமே அறைந்துள்ளது. ஆனாலும், அது வரவேற்க கூடியது. கவுரவம் நிறைந்த சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்றில், இந்த மாறுபட்ட தீர்ப்பானது, புகழ்பெற்ற மாறுபாடான தீர்ப்புகளின் வரிசையில் இடம்பெறும்.
ஒரு நீதிபதியின் இந்த மாறுபட்ட தீர்ப்பு, நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம் மற்றும் அதனை செயல்படுத்தும் அரசின் வரைமுறைக்குட்பட்ட அதிகாரம் ஆகியவற்றுக்கு இடையேயான உள்ளார்ந்த வேறுபாட்டை முன்னே கொண்டு வந்துள்ளது.
ஜனநாயகத்தில் நாடாளுமன்றத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அந்த ஒரு நீதிபதியின் மாறுபட்ட தீர்ப்பு வலியுறுத்தி உள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்து உள்ளார்.