இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கர்நாடக அரசு சார்பில் பாராட்டு விழா; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு

சந்திரயான்-3 திட்டம் வெற்றிக்கு வித்திட்ட விஞ்ஞானிகள் உள்பட 1,000 பேருக்கு கர்நாடக அரசு சார்பில் விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார்.

Update: 2023-08-24 22:08 GMT

பெங்களூரு:

சந்திரயான்-3 திட்டம் வெற்றிக்கு வித்திட்ட விஞ்ஞானிகள் உள்பட 1,000 பேருக்கு கர்நாடக அரசு சார்பில் விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார்.

சித்தராமையா பேட்டி

சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வு செய்வதை தொடர்ந்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேற்று பெங்களூரு பீனியாவில் உள்ள இஸ்ரோ விண்கல கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்றார்.

அங்குள்ள விஞ்ஞானிகளை அவர் நேரில் பாராட்டி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-

கவுரவப்படுத்த முடிவு

இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்ட வெற்றியால் ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை திரும்பி பார்க்கிறது. சீனா, ரஷியா, அமெரிக்கா நாடுகள் மட்டுமே நிலவில் கால் பதித்து இருந்தன. இப்போது 4-வதாக நமது நாடும் அங்கு கால் பதித்துள்ளது.

நாம் அனைவரும் இஸ்ரோவின் இந்த சாதனையை கொண்டாட வேண்டும். கர்நாடக அரசு சார்பில் விதான சவுதாவின் விருந்தினர் அரங்கில் விழா நடத்தி இந்த விஞ்ஞானிகள் அனைவரையும் கவுரவப்படுத்த முடிவு செய்துள்ேளாம்.

1,000 விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா

இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்பட 500 விஞ்ஞானிகள் இந்த திட்டத்தில் பங்களிப்பு வழங்கியுள்ளனர். இது தவிர பிற பகுதிகளை சேர்ந்த 500 விஞ்ஞானிகளும் பங்களிப்பு செய்துள்ளனர். ஆகமொத்தம் 1,000 விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா நடத்தப்படும். அவர்கள் அனைவருக்கும் விதானசவுதா அரங்கில் விருந்தும் அளிக்க முடிவு செய்துள்ளோம்.

அதில் அவர்கள் அனைவருக்கும் மரியாதை செய்யப்படும். வருகிற 2-ந் தேதிக்கு பிறகு விழா நடத்தப்படும். 3.84 லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்துள்ள இந்த சந்திரயான்-3 விண்கலத்தின் சாதனை சாதாரணமானது அல்ல. இஸ்ரோவுக்கு கர்நாடக அரசின் ஆதரவு உண்டு. இது நமது நாட்டின் பெருமை மிகு நிறுவனம்.

இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

இந்த நிகழ்வின் போது, போசராஜு, அரசின் தலைமை செயலாளர் வந்திதாசர்மா, பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் தயானந்த் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்