மாநிலங்களவை தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) போட்டியா? குமாரசாமி பதில்
மாநிலங்களவை தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) போட்டியா? என்பது குறித்து குமாரசாமி பதில் அளித்துள்ளார்.
பெங்களூரு: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) ஆட்சிக்கு வந்தால் 5 அம்ச திட்டங்களை செயல்படுத்துவோம் என்று அறிவித்துள்ளோம். இதை பா.ஜனதாவினர் விமர்சித்துள்ளனர். தேவேகவுடா, குமாரசாமி, ரேவண்ணா, நிகில், பிரஜ்வல் என்ன செய்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். பா.ஜனதா எங்கள் குடும்பத்தை விமர்சித்ததன் மூலம் மரியாதையை வழங்கியுள்ளது. ஜனதா தளம்(எஸ்) கட்சியில் 123 வேட்பாளர்கள் இருக்கிறார்களா? என்று அக்கட்சி கேட்டுள்ளது.
இவ்வாறு விமர்சிக்கும் அக்கட்சி தலைவர்கள் ஆட்சி அதிகாரத்திற்காக எங்களின் வீட்டு வாசலுக்கு வந்தது ஏன்?. அவர்களுக்கு வெட்கம் இல்லையா?. இப்போது தான் போர் தொடங்கியுள்ளது. ஒரு நாள் பெய்த மழைக்கே பெங்களூரு நீச்சல் குளம் போல் மாறிவிட்டது.மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடுமாறு எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூறியுள்ளனர். எங்கள் கட்சியில் தான் கூடுதல் வாக்குகள் உள்ளன. நாங்கள் வேட்பாளரை நிறுத்தினால் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது. எங்கள் கட்சியில் எம்.எல்.சி. பதவி யாருக்கு வழங்குவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. காங்கிரசில் இருந்து வந்த சி.எம்.இப்ராகிமுக்கு கட்சி தலைவர் பதவியே வழங்கியுள்ளோம்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.