அரசு பள்ளிகளில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி வழங்கப்பட்டதா?; மந்திரி பி.சி.நாகேஸ் விளக்கம்

அரசு பள்ளிகளில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து மந்திரி பி.சி.நாகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2022-08-18 16:31 GMT

பெங்களூரு:

ஆன்மிக பண்டிகைகள்

கர்நாடகத்தில் அரசு பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர அரசு தடை விதித்தது. இதை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட்டு, அரசின் உத்தரவு சரியே என்று தீர்ப்பு கூறியது. இந்த நிலையில் கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை வைத்து வழிபடலாம் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறியுள்ளார். இதுகுறித்து கருத்து தொிவித்துள்ள வக்பு வாரியம், ஆன்மிக பண்டிகைகளை பள்ளிகளில் கொண்டாட அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் எந்த விதமான மத ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்த அரசு அனுமதி அளிக்கவில்லை. இனி வரும் நாட்களில் அதற்கு அனுமதியும் அளிக்க மாட்டோம். பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி சிலைகளை வைத்து வழிபடும் முறை சுதந்திரத்திற்கு முன்பு இருந்தே நடைபெற்று வருகிறது. அந்த நடைமுறைப்படியே விநாயகர் சிலைகளை வைத்து வழிபடலாம் என்று கூறியுள்ளேன். இது நாங்கள் ஏற்படுத்திய மரபு அல்ல. அதனால் வக்பு வாரியத்தின் கோரிக்கையை அரசு ஊக்குவிக்காது.

இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.

விநாயகர் சிலைகள்

வக்பு வாரியம் கூறுகையில், "பள்ளிகளில் மத ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கலாம் என்று நாங்கள் முன்பு கூறினோம். இப்போது அரசு விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி அளித்துள்ளது. அதேபோல் இஸ்லாமிய பண்டிகையை கொண்டாடவும் அனுமதி அளிக்க வேண்டும்" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்