ரோகிணி சிந்தூரி தொடர்ந்த மானநஷ்ட வழக்கை ரத்து செய்ய கோரிய-ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவின் மனு தள்ளுபடி

ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி தொடர்ந்த மானநஷ்ட வழக்கை ரத்து செய்ய கோரி ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

Update: 2023-09-27 18:45 GMT

பெங்களூரு:-

அவதூறு கருத்து

கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்து வருபவர் ரோகிணி சிந்தூரி. இதேபோல் ஐ.பி.எஸ். அதிகாரியான ரூபா, மாநில போலீஸ் துறையில் உயர் பதவியில் இருக்கிறார். இவர்கள் இடையே கடந்த ஜனவரி மாதம் மோதல் ஏற்பட்டது. அப்போது ரோகிணி சிந்தூரியின் ரகசிய புகைப்படங்களை, ரூபா தனது முகநூல்(பேஸ்புக்) பக்கத்தில் வெளியிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு

ஏற்பட்டது. ஒருவரை ஒருவர், கடுமையாக விமர்சித்தனர்.

இது மாநில அரசின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அரசு உத்தரவிட்டது. மேலும் அவர்கள் மீது துறை சார்ந்த விசாரணைக்கும் உத்தரவிட்டது. முன்னதாக தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மீது, ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி கடந்த மார்ச் மாதம் பெங்களூரு முதன்மை கோர்ட்டில் ரூ.1 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

மனு தள்ளுபடி

அந்த வழக்கின் மீதான விசாரணையின்போது, ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு நோட்டீஸ் அனுப்பவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்ய கோரி ரூபா தரப்பில் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் ஐகோர்ட்டில் நடைபெற்றது.

அப்போது வழக்கு நீதிபதி சச்சின் சங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி, மனுதாரர் ரூபா, தனது சமூக வலைதள பக்கத்திலும், ஊடகங்கள் முன்பும் பேசியதை ஆய்வு செய்தால், ரூபா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யலாம் என்று கூறினார். மேலும் அவர் மீதான மானநஷ்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்