ரோகிணி சிந்தூரி தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு முன்ஜாமீன்

ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு முன்ஜாமீன் வழங்கி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-06-06 19:44 GMT

பெங்களூரு:

ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு முன்ஜாமீன் வழங்கி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரி

கர்நாடகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. ரோகிணி சிந்தூரிக்கு எதிராக தனது முகநூல் பக்கத்தில் ரூபா 19 குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். மேலும் ரோகிணி சிந்தூரியின் ரகசிய புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். இந்த விவகாரம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, 2 பேரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

எனினும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டே சென்றனர். இதனால் கர்நாடக அரசு வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தனக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளியிடவும், அவதூறாக பேசுவதற்கும் தடை விதிக்க கோரி பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் ரோகிணி சிந்தூரி வழக்கு தொடர்ந்தார்.

மானநஷ்ட வழக்கு

அந்த மனு மீதான விசாரணையின்போது நீதிபதி, ரோகிணி சிந்தூரிக்கு எதிராக சமூக வலைத்தளங்கள் உள்பட எதிலும் அவதூறாக பேசக்கூடாது என கூறி ரூபாவுக்கு உத்தரவு பிறப்பித்தார். இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே ரூபா, தொடர்ந்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவை மீறி, தன்னைப் பற்றி அவதூறாக பேசிய ரூபா மீது மானநஷ்ட வழக்கு ஒன்றை ரோகிணி சிந்தூரி தொடர்ந்தார்.

இந்த நிலையில் தன் மீது தொடரப்பட்டுள்ள மானநஷ்ட வழக்கை ரத்து செய்ய கோரி, பெங்களூரு 24-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ரூபா மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை பெங்களூரு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ரோகிணி சிந்தூரி தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் ரூபாவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் வழக்கு தொடர்பான விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்