விருந்துக்கு அழைத்து... புது காதலருடன் சேர்ந்து பழைய காதலரை தன் கையாலேயே கொன்ற காதலி

மேற்கு வங்காளத்தில் பிடிக்காத பழைய காதலரை விருந்துக்கு அழைத்து, புது காதலருடன் சேர்ந்து காதலி இரும்பு தடியால் அடித்து, கொலை செய்து, கைகளை கட்டி வீசி சென்று உள்ளார்.

Update: 2023-03-07 10:40 GMT

கோப்பு படம்



துர்காப்பூர்,


மேற்கு வங்காளத்தின் துர்காப்பூர் மாவட்டத்தில் கோபால்மத் நகரில் தேசிய நெடுஞ்சாலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த இளைஞர் ஒருவரின் உடலை போலீசார் கைப்பற்றினர்.

தீவிர விசாரணையில் உயிரிழந்தது துர்காப்பூரின் பினாசிடி நாகபள்ளி பகுதியை சேர்ந்த அவினாஷ் ஜன் (வயது 19) என தெரிய வந்தது. கைகள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது போலீசாருக்கு சந்தேகம் ஏற்படுத்தியது.

இதன்பின்னர், அவினாசுக்கு, ஆப்ரீன் கட்டூன் என்பவருடன் காதல் ஏற்பட்டு அது தகராறில் முடிந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, துர்காப்பூரின் நைன் நகரை சேர்ந்த ஆப்ரீனிடம் சென்று விசாரித்ததில், அவருக்கு புது காதலரான பிஜூபாரா பகுதியை சேர்ந்த பிட்டு குமார் சிங் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது போலீசாருக்கு தெரிய வந்தது.

ஆப்ரீன் கூறிய தகவலை கொண்டு, பிட்டுவை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இதுபற்றி போலீசார் கூறும்போது, ஆப்ரீனுக்கு பிட்டு மீது காதல் வந்ததும் பழைய காதலரை விட்டு ஒதுங்கி இருக்க விரும்பியுள்ளார்.

ஆனால், அதனை அறியாத அவினாஷ் தொடர்ந்து ஆப்ரீனை காதலித்து வந்து உள்ளார். இதனால், இருவரும் சேர்ந்து அவினாஷை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளனர்.

இதன்படி, விருந்து ஒன்றில் கலந்து கொள்ளும்படி அவரை அழைத்து உள்ளனர். பிட்டு வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவரது வீட்டில் யாரும் இல்லாதபோது, அவினாசுக்கு மதுபானம் ஊற்றி கொடுத்து உள்ளனர்.

இதில் போதை ஏறியதும், ஆப்ரீன் இரும்பு தடியை எடுத்து அவினாஷின் தலையில் அடித்து உள்ளார்.

அவினாஷ் மயங்கி, விழுந்ததும், பிட்டு கண்ணாடி பாட்டில் ஒன்றை எடுத்து அவினாஷின் தலையில் அடித்து, உடைத்து உள்ளார். இந்த தாக்குதலில் அவினாஷ் உயிரிழந்ததும், இருவரும் சேர்ந்து அவரது கைகளை கட்டி உள்ளனர்.

அதற்கு முன்பே அவர் உயிரிழந்து விட்டாரா? அல்லது உயிரிழந்த பின்னர் கைகளை கட்டினார்களா? என்ற விவரம் தெரியவில்லை. அதன்பின்பு, இரு சக்கர வாகனத்தில் உடலை ஏற்றி சென்று தேசிய நெடுஞ்சாலையில் வீசி விட்டு சென்றுள்ளனர் என காவல் அதிகாரி கூறியுள்ளார்.

அவர்கள் இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களை துர்காப்பூர் சப்-டிவிசனல் கோர்ட்டில் இன்று போலீசார் ஆஜர்படுத்துகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்