காஷ்மீரில் 2 நகரங்களில் இணையதள சேவை துண்டிப்பு
பதேர்வா மற்றும் கித்வார் நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது.
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் சமீபகாலமாக வெளிமாநிலத்தவர்கள் மற்றும் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது. அண்மையில் பள்ளி ஆசிரியை, வங்கி மேலாளர் உள்ளிட்டோர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அங்குள்ள பதேர்வா நகரில் மோதலை தூண்டும் வகையிலான வீடியோ சமுக வலை தளங்களில் வேகமாக பரவியதால், அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. இது தொடர்பாக போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்தனர். மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மத மோதல் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
அதோடு தோடா, கித்வார் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு உள்ளது. பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரவாமல் இருக்க பதேர்வா மற்றும் கித்வார் நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கபட்டு உள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அமைதி நிலவுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.