மணிப்பூரில் இணையதள சேவைகளுக்கு ஜூலை 10 வரை தடை நீட்டிப்பு
மணிப்பூரில் இணையதள சேவைகளுக்கு ஜூலை 10 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இம்பால்,
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ம் தேதி இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். தொடர்ந்து அடிக்கடி வன்முறை பரவி வரும் சூழலில் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுக்க மே 3-ம் தேதி இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. கலவரம் எதிரொலியாக இணையதள சேவைக்கான தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அமைதி மற்றும் பொது ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் மணிப்பூரில் மேலும் 5 நாட்களுக்கு இணையதள சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூலை 10-ம் தேதி மாலை 3 மணி வரை இணையதள சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.