இந்தியாவில் வறுமை குறைந்து வருவதை சர்வதேச நிறுவனங்களும் ஒப்புக் கொண்டுள்ளன - பிரதமர் மோடி

150 நாடுகளுக்கு கொரோனா மருந்துகள், தடுப்பூசிகளை இந்தியா அனுப்பியதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

Update: 2022-05-31 09:22 GMT

Image Courtesy : ANI 

சிம்லா,

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு நேற்றுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்தது. இதனை முன்னிட்டு மே 30ந்தேதி முதல் ஜூன் 14ந்தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை பெரிய அளவில் நடத்த அக்கட்சி திட்டமிட்டு உள்ளது.

பா.ஜ.க. அரசின் எட்டு ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் இந்தப் புதுமையான பொதுமக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நாடு முழுவதும் உள்ள மாநில தலைநகர்கள், மாவட்ட தலைமையிடங்கள், விவசாய அறிவியல் மையங்கள் ஆகியவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் இன்று நடந்த பொது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கிசான் திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கான 11-வது நிதி தவணை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் பிரதமர் மோடி பேசுகையில், " இன்று இந்தியாவின் ஸ்டார்ட் அப்கள் உலகளவில் பேசப்படுகிறது. உலக வங்கி கூட இந்தியாவை பற்றி பேசுகிறது. இதற்குமுன் நெபாட்டிசம், மோசடிகள் பற்றி பேச்சுகள் இருந்தன. ஆனால் இன்று அரசாங்க திட்டங்களின் நன்மைகள் பற்றி அதிகம் பேசப்படுகின்றன.

இன்று இந்தியா பல நாடுகளுக்கு உதவி வருகிறது. கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட 150 நாடுகளுக்கு மருந்துகள், தடுப்பூசிகளை நாம் அனுப்பியுள்ளோம். இந்தியாவில் வறுமை குறைந்து வருவதை சர்வதேச நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன.

கடந்த 8 ஆண்டுகளில் நான் என்னை ஒரு முறைகூட பிரதமராக நினைத்ததில்லை. கோப்புகளில் கையெழுத்திடும்போது மட்டும் தான் பிரதமர் என்ற பொறுப்பு எனக்கு உள்ளது. ஆனால், கோப்புகள் சென்ற உடன் நான் பிரதமராக கிடையாது. எனது வாழ்க்கையின் எல்லாமான 130 கோடி மக்களின் முதன்மை சேவகன் நான். எனது வாழ்க்கை உங்களுக்கு தான்' என பிரதமர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்