ஜே.பி.நட்டா மீதான விசாரணைக்கு இடைக்கால தடை
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மீது பதிவான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:-
ஜே.பி.நட்டா மீது வழக்கு
கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்று இருந்தார். அதன்படி, கடந்த மே மாதம் 7-ந் தேதி விஜயநகர் மாவட்டம் ஹரப்பனஹள்ளி டவுனில் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ஜே.பி.நட்டா பேசி இருந்தார். அப்போது கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்தால், மத்திய அரசிடம் இருந்து கர்நாடகத்திற்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் கிடைக்காமல் போய் விடும் என்று பேசி இருந்தார்.
வாக்காளர்களுக்கு ஆசை வார்த்தைகளை தூண்டும் விதமாக ஜே.பி.நட்டா பேசியதாகவும், இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி இருந்தார்கள். மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஜே.பி.நட்டா மீது ஹரப்பனஹள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
விசாரணைக்கு இடைக்கால தடை
இந்த நிலையில், தன் மீது பதிவாகி இருக்கும் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் வழக்கை ரத்து செய்யும்படியும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் ஜே.பி.நட்டா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடைபெற்றது.
ஜே.பி.நட்டா சார்பில் ஆஜரான வக்கீல் மனுதாரர் மீது பதிவான வழக்கை ரத்து செய்யும்படி வாதிட்டார். இதற்கு அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, ஜே.பி.நட்டா மீது பதிவாகி உள்ள வழக்கில் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். அந்தமனு மீதான விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.