இந்துக் கடவுள்களை அவமதிப்பதே அவர்களின் செயல்திட்டம்: ஆ.ராசாவின் கருத்துக்கு பா.ஜ.க. கண்டனம்

ஆ.ராசாவின் கருத்துகளுடன் உடன்படுகிறார்களா? என்பதை காங்கிரசும் இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் சொல்ல வேண்டும் என ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தினார்.

Update: 2024-03-05 11:33 GMT

புதுடெல்லி:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்களவை எம்.பி. ஆ.ராசா, சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, இந்தியா ஒரு நாடு அல்ல என்று கூறியது புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. "ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் பாரத் மாதா கி ஜெய் என்பதை நாங்கள் ஏற்க மாட்டோம்" என்றும் அவர் கூறியிருந்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆ.ராசாவின் பேச்சுக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. எம்.பி. ராசா சமீபத்தில் தமிழில் பேசியபோது "இந்தியா ஒரு நாடு அல்ல. இதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். ஒரு நாடு என்பது ஒரே மொழி, ஒரே பாரம்பரியம், ஒரே கலாச்சாரம் கொண்டதாக இருக்கவேண்டும். அது மட்டுமே ஒரு நாடு. எனவே, இந்தியா ஒரு நாடு அல்ல, துணைக் கண்டம்" என கூறியிருக்கிறார். இது மாவோயிஸ்ட் சித்தாந்தம்.

இதேபோல் "இது உங்களின் ஜெய் ஸ்ரீ ராம் என்றால், இது உங்களின் பாரத் மாதா கி ஜெய் என்றால், அந்த ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் பாரத் மாதா என்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழர்கள் அதை ஏற்கவில்லை. நீங்கள் அங்கு போய் நாங்கள் ராமரின் எதிரிகள் என்று சொல்லுங்கள்", என்றும் ராசா பேசியிருக்கிறார்.

ஆ.ராசாவின் இத்தகைய கருத்துகளுடன் உடன்படுகிறார்களா? என்பதை காங்கிரசும் இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் சொல்ல வேண்டும். இதுபோன்ற கருத்துகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தியாவின் அடையாளத்தை இழிவுபடுத்துவதும், இந்தியர்களின் நம்பிக்கையை அவமதிப்பதும், இந்துக் கடவுள்களை அவமதிப்பதும் இந்தியா கூட்டணியின் வழக்கமாகவும் அரசியல் செயல்திட்டமாகவும் மாறிவிட்டது.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்