கார்வார் கடற்படை தளத்தில் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலில் தீ விபத்து; உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை

கார்வார் கடற்படை தளத்தில் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலில் தீவிபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

Update: 2022-07-21 13:25 GMT

பெங்களூரு:

ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பல்

கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் அருகே கடம்பா கடற்படை தளத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா' என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் சீரமைப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், கார்வார் கடல் பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர்க்கப்பல் கார்வாரில் உள்ள அரபிக்கடலில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கமாண்டிங் அதிகாரியாக கேப்டன் சுஷில் மேனன் செயல்பட்டார்.

தீ விபத்து

இந்த நிலையில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இதனை அறிந்த கப்பலில் இருந்த ஊழியர்கள், துரிதமாக செயல்பட்டு உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதிர்ஷ்வசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த தகவலை இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'கார்வார் கடற்பகுதியில் நடந்த சோதனையின்போது ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர்க்கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை கப்பல் ஊழியர்கள் அணைத்தனர். உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை' என்று கூறப்பட்டுள்ளது.

இந்த போர்க்கப்பல் தீவிபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கப்பலில் சிலிண்டர் வெடித்ததில் 2 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

44,500 டன் எடை

ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர்க்கப்பல் கடந்த 2013-ம் ஆண்டு ரஷியாவிடம் இருந்து வாங்கப்பட்டது. இது கியேவ் வகை விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆகும். 44,500 டன் எடையுள்ள இந்த போர்க்கப்பல், சுமார் 284 மீட்டர் நீளமும், 60 மீட்டர் உயரமும் கொண்டதாகும்.

22 தளங்களை கொண்ட இந்த போர்க்கப்பல் 30-க்கும் மேற்பட்ட போர் விமானங்களை எடுத்து செல்லும் திறன் கொண்டதாகும்.

Tags:    

மேலும் செய்திகள்