போராட்டங்களை கைவிட்டு டாக்டர்கள் இன்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.;
புதுடெல்லி,
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த மாதம் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்தும், மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மாநிலத்தில் ஓரு மாதத்துக்கும் மேலாக டாக்டர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் நோயாளிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் மத்திய-மாநில அரசுகளுக்கு கடந்த மாதம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல், டாக்டர்களின் வேலை நிறுத்தத்தால் மாநிலத்தில் 23 நோயாளிகள் உயிரிழந்திருப்பதாக கூறி, அது குறித்த சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என்ற மாநில அரசின் உறுதியையும் கபில்சிபல் கோர்ட்டில் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "மேற்கு வங்காளத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் நாளை (இன்று) மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். இளநிலை டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்பி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்கள் மீண்டும் பணியைத் தொடங்கினால் எந்தவிதமான பாதகமான நடவடிக்கையும் இருக்காது. தவறினால் நடவடிக்கை ஏற்பட வாய்ப்புள்ளது" என்று அதில் தெரிவித்தனர்.
அதேநேரம் டாக்டர்கள், சமூகத்தின் தேவைகளைப் புறக்கணிக்கக் கூடாது என்றும், நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை 17-ந்தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அதற்குள் புதிய விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு அறிவுறுத்தினர்.