"2025-க்குள் இந்தியாவில் காசநோய் ஒழிக்கப்படும்" - மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்
உலகிற்கு முன்மாதிரியாக 2025-க்குள் இந்தியாவில் காசநோய் ஒழிக்கப்படும் என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு,
ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில், நடமாடும் காசநோய் ஒழிப்பு வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்வு நேற்று நடந்தது. பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, அவரது கனவான காசநோய் அற்ற இந்தியாவை உருவாக்கும் நோக்கில் இந்த வாகனத்தை, மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். இந்த வாகனம் பல்வேறு கிராமங்களுக்கு சென்று காசநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை வழங்கி காசநோய் ஒழிப்பு பணியில் ஈடுபடும்.
வாகன பயணத்தை தொடங்கி வைத்து பேசிய ஜிதேந்திர சிங், "2025-ம் ஆண்டிற்குள் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக காசநோய் இல்லாத இந்தியா உருவாக்கப்படும். இந்த இலக்கை அடைய பொதுமக்கள் தனியார் கூட்டு இயக்கம் அவசியம்" என்று அவர் கூறினார். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட காசநோயாளிகளுக்கு உதவும் மருந்து-கருவி பெட்டகத்தை அவர் வழங்கினார்.