உள்நாட்டு விமான போக்குவரத்தில் கொரோனாவுக்கு முந்தைய நிலையை இன்னும் எட்டவில்லை - மத்திய அரசு தகவல்

உள்நாட்டு விமான போக்குவரத்தில் கொரோனாவுக்கு முந்தைய நிலையை இன்னும் எட்டவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2022-11-22 23:05 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நடப்பு ஆண்டு கடந்த அக்டோபர் மாதம் வரையிலான உள்நாட்டு விமான போக்குவரத்து விவரங்களை சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் நேற்று வெளியிட்டது.

இதன்படி கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கையைவிட இந்த ஆண்டில் அக்டோபர் மாதம்வரை பயணித்த உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை 59.16 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அதாவது கடந்த ஆண்டு 6 கோடியே 20 லட்சத்து 96 ஆயிரம் பயணிகள் பயணம் செய்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை 9 கோடியே 88 லட்சத்து 31 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

அக்டோபர் மாத அடிப்படையில் கணக்கிட்டால் கடந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தைவிட இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 89.85 லட்சம் பயணிகள் பறந்த நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1 கோடியே 14 லட்சம் பயணிகள் சென்றுள்ளனர்.

ஆனால் இந்த வளர்ச்சி, கொரோனாவுக்கு முந்தைய நிலையை இன்னும் எட்டவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 123.16 லட்சம் பயணிகள் உள்நாட்டு விமானங்களில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்