முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு
ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலை கடற்படையிடம் கொச்சி கப்பல் கட்டும் தளம் வழங்கியது.;
கொச்சி,
முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலை கடற்படையிடம் கொச்சி கப்பல் கட்டும் தளம் வழங்கியது. இது ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற பெயரில் கடற்படையில் சேரும்.
கொச்சி கப்பல் கட்டும் தளம், கடற்படைக்காக ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை கட்டி முடித்துள்ளது.
முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த போர்க்கப்பலை இந்திய கடற்படையிடம் கொச்சி கப்பல் கட்டும் தளம் வழங்கி உள்ளது.
இந்த கப்பல் அடுத்த மாதம் முறைப்படி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, இந்திய கடற்படையில் சேர்க்கப்படுகிறது. அப்போது இந்த கப்பல், ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற பெயரைப் பெறும்.
1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றிய நாட்டின் முதல் விமானம் தாங்கி போரக்கப்பலின் பெயர்தான் இந்த ஐ.என்.எஸ். விக்ராந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில், நமது நாட்டின் பாதுகாப்பு நிலையை இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் மேம்படுத்தும்.
இதையொட்டி பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி சுதந்திர அமுத பெருவிழா கொண்டாடுகிற தருணத்தில், ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம்தாங்கி போர்க்கப்பலின் மறுபிறப்பு, மேம்பட்ட கடல் பாதுகாப்பையொட்டிய நமது திறனை வளர்ப்பதில், நாட்டின் ஆர்வத்துக்கு ஒரு உண்மையான சாட்சி ஆகும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விமானம் தாங்கி போர்க்கப்பலின் சிறப்பம்சங்கள் வருமாறு:-
* இந்த கப்பலின் நீளம் 262 மீட்டர் ஆகும். இது அதன் முந்தைய வடிவத்தை விட மேம்பட்டதாகும். 4 கியாஸ் விசையாழிகளைக் கொண்டு, 88 மெகாவாட் மின்சாரத்தைக் கொண்டு செயல்படும். இதன் அதிகபட்ச வேகம் 28 கடல் மைல்கள் ஆகும்.
* இந்தக் கப்பல் ரூ.20 ஆயிரம் கோடியில் கட்டப்பட்டுள்ளது.
* முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல், நமது சுய சார்பு திட்டத்துக்கு மிகச்சரியான உதாரணமாக இருக்கும். மத்திய அரசின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு உந்துதலை வழங்குகிறது.
* இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் மூலம், முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து விமானம் தாங்கி போர்க்கப்பல்களை கட்டும் நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.
* மிக்-29 கே ரக போர் விமானங்கள், காமோவ்-31 ரக போர் விமானங்கள், எம்.எசி.-60 ஆர் பன்பயன்பாடு ஹெலிகாப்டர்கள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட லகுரக ஹெலிகாப்டர்கள் மற்றும் லகு ரக போர் விமானங்கள் போன்ற நிலையான இறக்கை மற்றும் சுழலும் விமானங்களுக்கு ஏற்ப இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* 30 போர் விமானங்களுடன் இது இயங்க முடியும்.
* நாட்டின் முன்னணி நிறுவனங்களான பாரத மின்னணு நிறுவனம், பாரத கனரக மின்னணு நிறுவனம், கெல்ட்ரான், கிர்லோஸ்கர், லார்சன் அண்ட் டூப்ரோ, வார்ட்சிலா இந்தியா மற்றும் 100-க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் தளவாட, எந்திர பங்களிப்புடன் இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.