பட்ஜெட் நேற்று தாக்கலான நிலையில், இந்திய பங்கு சந்தைகள் இன்று வீழ்ச்சி

நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் தாக்கலான நிலையில், இந்திய பங்கு சந்தைகள் இன்று வீழ்ச்சி அடைந்து உள்ளன.

Update: 2023-02-02 05:36 GMT

மும்பை,


நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். இதில் பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. வரி செலுத்துவோருக்கு நிவாரணம் ஏற்படும் வகையிலான சாதக அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

நாட்டில் முதலீட்டு செலவீட்டை ஊக்குவிக்கும் வகையிலான மத்திய அரசின் அறிவிப்புகளுக்கு முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதனை முன்னிட்டு பங்கு வர்த்தகம் லாபத்துடன் காணப்பட்டது.

மும்பை பங்கு சந்தையில் நேற்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 450 புள்ளிகள் வரை உயர்ந்து 60,007 புள்ளிகளாக இருந்தது.

இதில், வங்கி துறையானது லாபத்துடன் தொடங்கியது. இதன்படி, எஸ் வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் கோடக் வங்கி ஆகியவற்றின் பங்குகள் லாபத்துடன் தொடங்கின.

கோல் இந்தியா, பவர் கிரிக் கார்ப்பரேசன் மற்றும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்டவையும் லாபத்துடன் காணப்பட்டன. எனினும், அதானி குழுமத்தின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 130 புள்ளிகள் வரை உயர்ந்து 17,792 புள்ளிகளாக இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்து ரூ.81.77 ஆக இருந்தது.

நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் தாக்கலான நிலையில், அது பங்கு வர்த்தகத்திலும் எதிரொலித்து இருந்தது. ஆனால், இந்திய பங்கு சந்தைகள் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சரிவை கண்டன.

இதன்படி, மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 383 புள்ளிகள் வரை சரிந்து 59,595.31 புள்ளிகளாக இருந்தது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 45 புள்ளிகள் வரை சரிந்து 17,616.30 புள்ளிகளாக இருந்தது.

சென்செக்ஸ் மதிப்பீட்டில் வெல்ஸ்பன், பி.சி.ஜி., கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ், பார்பீக்-நேசன் ஹாஸ்பிடாலிட்டி ஆகிய நிறுவன பங்குகள் லாபத்துடன் காணப்பட்டன.

எனினும், அதானி கிரீன், அதானி டிரான்ஸ்மிசன், அதானி டோட்டல் கேஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் மற்றும் பிர்லாசாப்ட் ஆகியன சரிவை கண்டன.

இவற்றில் அதானி குழும நிறுவனங்கள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. நேற்று முடிவடைந்த வர்த்தக நிறைவுடன் ஒப்பிடும்போது அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் 10 சதவீதம் அளவுக்கு சரிவடைந்து அதன் ஒரு பங்கின் விலை ரூ.1,921.85 என்ற அளவில் இருந்தது.

பங்கு வர்த்தகத்தில், அதானி குழுமத்திற்கு கடந்த 5 நாள்களில் மட்டும் ரூ. 7.44 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது, அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்காகும்.

இந்த நிலையில், இழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களை காக்கவே பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டது என்றும் இந்த முடிவால் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களில் எந்த பாதிப்பும் ஏற்படாது என அதானி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்.பி.ஓ.வில் இருந்து வெளியேறும் முடிவு அதானி தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், அதன் வழியே முதலீடு செய்த முதலீட்டாளர்களின் பணம் திருப்பி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்