வயநாடு நிலச்சரிவு; இந்திய ராணுவத்திற்கு 3-ம் வகுப்பு மாணவர் எழுதிய நெகிழ்ச்சிகரமான கடிதம்

3-ம் வகுப்பு மாணவர் எழுதிய நெகிழ்ச்சிகரமான கடிதத்திற்கு இந்திய ராணுவம் பதிலளித்துள்ளது.;

Update:2024-08-03 22:11 IST

Image Courtesy : @IaSouthern

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த மீட்பு பணியில், தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, போலீசார் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வயநாட்டில் இந்திய ராணுவம் மேற்கொண்ட மீட்பு பணிகள் குறித்து கேரளாவைச் சேர்ந்த ரயான் என்ற 3-ம் வகுப்பு மாணவர் ஒருவர் இந்திய ராணுவத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "அன்புள்ள இந்திய ராணுவத்திற்கு, எனது அன்புக்குரிய வயநாடு ஒரு பெரிய நிலச்சரிவால் தாக்கப்பட்டு பேரழிவை சந்தித்துள்ளது.

இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை நீங்கள் மீட்பதைக் கண்டு நான் பெருமையும், மகிழ்ச்சியும் அடைந்தேன். நீங்கள் பிஸ்கட் சாப்பிட்டு உங்கள் பசியைப் போக்கிக் கொண்டு பாலம் கட்டும் வீடியோவைப் பார்த்தேன். அந்த காட்சி என்னை ஆழமாக பாதித்தது. ஒரு நாள் இந்திய ராணுவத்தில் சேர்ந்து என் தேசத்தை பாதுகாக்க ஆசைப்படுகிறேன்" என்று கூறியுள்ளார்.

அந்த மாணவரின் கடிதம் இணையத்தில் வைரலான நிலையில், அந்த கடிதத்திற்கு இந்திய ராணுவம் பதிலளித்துள்ளது. அதில், "அன்புள்ள ரயான், உங்கள் இதயப்பூர்வமான வார்த்தைகள் எங்களை நெகிழச் செய்தன. இக்கட்டான காலங்களில், நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும் என்பதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். உங்கள் கடிதம் அதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

உங்களைப் போன்ற ஹீரோக்கள்தான் எங்களால் முடிந்ததைச் செய்ய எங்களுக்கு ஊக்கமளிக்கிறார்கள். நீங்கள் சீருடை அணிந்து எங்களுடன் நிற்கும் நாளுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். நாம் ஒன்றுபட்டு நமது தேசத்தை பெருமைப்படுத்துவோம். இளம் வீரரே, உங்கள் தைரியத்திற்கும் உத்வேகத்திற்கும் நன்றி" என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்