'எதிர்கால பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்திய விமானப்படை தயாராகி வருகிறது' - ஜனாதிபதி திராவுபதி முர்மு
நமது விமானப்படை எதிர்கால பாதுகாப்பு சூழ்நிலைக்கு ஏற்ப தயாராக இருப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
ஐதராபாத்,
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே துண்டிகலில் உள்ள இந்திய விமானப்படை அகாடமியின் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று விமானப்படையின் அணிவகுப்பை பார்வையிட்டார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-
"1948, 1965, 1971 ஆகிய ஆண்டுகளில் பகை நாடுகளுடன் ஏற்பட்ட போர்களில் நாட்டை காக்க இந்திய விமானப்படையின் துணிச்சல் மிக்க வீரர்கள் பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள். அது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. கார்கில் போரின்போதும், பாலகோட்டில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை அழித்தபோதும் அதே உறுதியையும் திறனையும் வெளிப்படுத்தியது இந்திய விமானப்படை.
இந்திய விமானப் படை இப்போது அனைத்துப் பணிகளிலும், கிளைகளிலும் பெண் அதிகாரிகளை இணைத்துக் கொண்டிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பெண் போர் விமானிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட உள்ளது. ஏப்ரல் 2023-ல், நான் அசாமில் உள்ள தேஜ்பூர் விமானப்படை நிலையத்தில் சுகோய் 30 எம்.கே.ஐ. போர் விமானத்தில் பறந்தேன். பிரம்மபுத்திரா மற்றும் தேஜ்பூர் பள்ளத்தாக்குகளை சுற்றி சுமார் 30 நிமிடங்கள் பறந்து, இமயமலையின் சிறந்த காட்சியுடன் விமானப்படை நிலையத்திற்கு திரும்பினேன். கடல் மட்டத்திலிருந்து சுமார் 2 கிமீ உயரத்தில் மணிக்கு 800 கிமீ வேகத்தில் பறப்பது உண்மையில் ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது.
மனிதாபிமான உதவிகளையும் பேரிடர் நிவாரணப் பணிகளையும் இந்திய விமானப்படை மேற்கொண்டு வருகிறது. ர்கால பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப தயாராக இருப்பதற்கு இந்திய விமானப்படை நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார்.