எரிசக்தி துறையில் அடுத்த 6 ஆண்டுகளில் 67 பில்லியன் டாலர் முதலீடு - பிரதமர் மோடி பேச்சு
உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.;
பனாஜி,
பிரதமர் மோடி இன்று கோவாவுக்கு சென்றார். அவர் ஒ.என்.ஜி.சி., கடல் வாழ் உயிரின மையத்தை திறந்து வைத்தார். பின்னர், 2024ம் ஆண்டு இந்திய எரிசக்தி வாரத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்து பேசியதாவது:-
இந்தியப் பொருளாதாரம் 7.5 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா விரைவில் மாறும் என உலகம் முழுவதும் உள்ள பொருளாதார வல்லுநர்கள் நம்புகிறார்கள்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு எரிசக்தி துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அடுத்த 5-6 ஆண்டுகளில் இந்தியாவில் எரிசக்தி துறையில் 67 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட உள்ளது. இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு எரிசக்தி துறையில் முதலீடு செய்து வருகிறது. இந்தியாவில் எரிசக்தியின் தேவை 2045ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் எரிசக்தி தேவைக்கு மத்தியில், இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் மலிவு விலையில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் மீண்டும் 7.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. சமீபத்தில் ஐ.எம்.எப்., கூட இதே வேகத்தில் நாம் வளர்ச்சியடைவோம் என்று கணித்துள்ளது.
வீட்டில் சோலார் மின்தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மின் அமைப்புகள் மூலம் பெற்று விநியோகிப்படும். 1 கோடி சோலார் கூரை இணைப்புகள் மூலம், குடும்பங்கள் விரைவில் மின்சாரத் தேவையில் தன்னிறைவு பெறும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 17 எரிசக்தித்துறை மந்திரிகள், 900க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்றனர்.