உண்மைகளை திரித்து கூறுவதா? அமெரிக்க ஆணையம் மீது இந்தியா விமர்சனம்
சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் உண்மைகளை தவறாக சித்தரிப்பதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் விமர்சகர்கள் குறிப்பாக மத சிறுபான்மையினர்கள் மற்றும் அவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாக அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் குற்றம் சுமத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பை இந்தியா பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்ட அறிக்கையில், "சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின், ஒருதலைபட்சமான தவறான கருத்துக்களை நாங்கள் பார்த்தோம். இந்த கருத்துக்கள் இந்தியா மற்றும் அதன் அரசியலமைப்பு கட்டமைப்பு, அதன் பன்மைத்தன்மை மற்றும் அதன் ஜனநாயக நெறிமுறைகள் பற்றிய புரிதல் இன்மையை பிரதிபலிக்கிறது.
வருந்தத்தக்க வகையில், இந்த ஆணையத்தின் அறிக்கைகள் மற்றும் உண்மைகளை மீண்டும் மீண்டும் தவறாக சித்தரித்து வருகிறது. இத்தகைய நடவடிக்கைகள் ஆணையத்தின் நம்பகத்தன்மை மற்றும் புறநிலை பற்றிய கவலைகளை வலுப்படுத்த மட்டுமே உதவுகின்றன." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.