அணுமின் நிலையங்களின் பட்டியலை பரிமாறிக் கொண்ட இந்தியா-பாகிஸ்தான்... காரணம் என்ன?

ஆண்டுதோறும் ஜனவரி 1-ந்தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே அணுசக்தி அமைப்புகளின் பட்டியல் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

Update: 2024-01-02 16:01 GMT

புதுடெல்லி,

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள அணுமின் நிலையங்கள், அணுசக்தி அமைப்புகளின் இருப்பிடங்கள் குறித்த பட்டியலை இரு நாடுகளின் அரசுகளும் நேற்றைய தினம் பரஸ்பரம் பறிமாறிக் கொண்டன. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"அணுமின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்ப்பதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள அணுமின் நிலையங்கள் மற்றும் அணுசக்தி அமைப்புகள் குறித்த பட்டியல், டெல்லி மற்றும் இஸ்லாமாபாதில் உள்ள தூதரகங்கள் முலம் பரஸ்பரமான முறையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்த வகையில் பரிமாறிக் கொள்ளப்படும் 33-வது பட்டியல் இதுவாகும். முதல் பட்டியல் கடந்த 1992-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி பரிமாறிக் கொள்ளப்பட்டது."

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள அணுசக்தி மையங்கள் மீது பரஸ்பரம் தாக்குதல் நடத்தப்படுவதை தவிர்க்கும் வகையில், இந்த ஒப்பந்தம் கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி கையெழுத்தாகி, 1991-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. ஆண்டுதோறும் ஜனவரி 1-ந்தேதியன்று இந்தியா-பாகிஸ்தான் இடையே இந்த பட்டியல் பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்