பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: சபரிமலையில் பாதுகாப்பு பணிக்கு 3 ஆயிரம் போலீசார் குவிப்பு

கடந்த சில நாட்களாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது.

Update: 2023-01-10 06:28 GMT

திருவனந்தபுரம்,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிந்து மகர விளக்கு பூஜைக்கான விழா நடந்து வருகிறது. சபரிமலை பொன்னம்பல மேட்டில் வருகிற 14-ந் தேதி மகர ஜோதி தரிசன நிகழ்ச்சி நடக்கிறது. இதை காண நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வந்த வண்ணம் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. மகர ஜோதி தரிசன நாளில் இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்டும் என கோவில் நிர்வாகிகள் எதிர்ப்பார்க்கிறார்கள். இதையடுத்து சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

பம்மை முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் நெரிசலின்றி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பாதுகாப்பு பணிக்கு 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் சன்னிதானம் மற்றும் சபரிமலை முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

மகரவிளக்கு தினத்தன்று கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். இதனை சன்னிதான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் போலீஸ் சூப்பிரண்டு பிஜூமோன் தெரிவித்தார். இதற்கிடையே கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெரிசலின்றி சன்னிதானம் செல்லவும், அங்கு 18-ம் படி ஏறவும் தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

இதற்காக நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதானம் வரை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். நேற்று முதல் இவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை தவிர பேரிடர் மீட்பு படையினர், சுகாதார துறையினர், தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்