ராஜாஜிநகர் உள்பட 7 பகுதிகளில் குடிநீர் மாசு அதிகரிப்பு; மாநகராட்சி ஆய்வில் அதிர்ச்சி தகவல்
பெங்களூருவில் ராஜாஜிநகர் உள்பட 7 பகுதிகளில் குடிநீர் மாசு அடைந்திருப்பதுடன், குடிப்பதற்கும் தண்ணீர் உகந்ததாக இல்லாமல் இருப்பது பற்றிய அதிர்ச்சி தகவல் மாநகராட்சி நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.;
பெங்களூரு:
பெங்களூரு நகரில் வீடுகள் மற்றும் ஓட்டல்களில் பயன்படுத்தும் குடிநீர் மக்கள் குடிப்பதற்கு உகந்ததாக உள்ளதா? என்பது குறித்து மாநகராட்சி சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு இருந்தது. பெங்களூரு நகரில் உள்ள 8 மண்டலங்களிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதாவது நகரில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு மையங்கள், வீடுகளுக்கு வினியோகம் ஆகும் தண்ணீர், ஓட்டல்களில் உள்ள தண்ணீரை எடுத்து ஆய்வு நடத்தப்பட்டு இருந்தது.
ஒட்டு மொத்தமாக 692 இடங்களில் இருந்து பெறப்பட்ட தண்ணீர் மாதிரி ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இந்த ஆய்வில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது ராஜாஜிநகர், மல்லேசுவரம், பசவனகுடி, பி.டி.எம். லே-அவுட், சிக்பேட்டை, ஜெயநகர், மகாலட்சுமி லே-அவுட் ஆகிய 7 பகுதிகளில் வினியோகம் ஆகும் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்களில் இருக்கும் தண்ணீர் மக்கள் குடிப்பதற்கு தகுதி இல்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த 7 இடங்களிலும் தண்ணீர் மாசு அடைந்திருப்பதாகவும், மக்கள் அந்த தண்ணீரை குடிப்பதற்கு உகந்ததாக இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக கோடை காலங்களிலும், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் போதும் இதுபோன்று குடிநீர் மாசு அடைந்தும், குடிப்பதற்கு உகந்ததாக இல்லாமல் இருப்பதும் வழக்கம். தற்போது 7 இடங்களிலும் தண்ணீர் மாசு அடைந்திருப்பதால், அதனை மக்கள் குடிப்பதற்கு உகந்ததாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.