ஹாசன் கூட்டுறவு வங்கியில் வருமான வரி சோதனை

ஜனதாதளம்(எஸ்) இயக்குனர் களாக கொண்ட ஹாசன் மாவட்ட கூட்டுறவு வங்கியில் வருமான வரி சோதனை நடந்தது.

Update: 2023-04-01 21:45 GMT

ஹாசன்:-

கர்நாடக சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலில் உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க மாநிலம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும், பணம், தங்கம், வெள்ளி மற்றும் பரிசு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

ஹாசன் கூட்டுறவு வங்கி

இந்த நிலையில், ஹாசனில் ஹாசன் மாவட்ட கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. ஹாசன் மாவட்டத்தில் 34 கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் ஆண்டு வருமானமாக ரூ.1,700 கோடி உள்ளது. மேலும் இந்த வங்கியில் 3 லட்சம் பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இங்கு 1.70 லட்சம் விவசாயிகளுக்கு விவசாய பணிகளுக்காக ரூ.1000 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டுறவு வங்கியில் 13 இயக்குனர்கள் உள்ளனர். அவர்களில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான சூரஜ் ரேவண்ணா எம்.எல்.சி., ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணா, ஜனதாதளம்(எஸ்) முன்னாள் எம்.எல்.ஏ. சிவராம் பட்டேல் ஆகிய 3 பேர் நியமன இயக்குனர்களாக உள்ளனர்.

வருமான வரி சோதனை

இந்த நிலையில் ஹாசன் மாவட்ட கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் குறித்து வருமான வரி துறைக்கு புகார்கள் வந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் ஹாசன் கூட்டுறவு வங்கியில் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் வங்கியில் உள்ள ஆவணங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். 2-வது நாளாக நேற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடர்ந்தனர்.

இந்த சோதனையையொட்டி வங்கியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வங்கி அதிகாரிகளை தவிர வேறு யாரும் வங்கி வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

முக்கிய ஆவணங்கள் சிக்கின

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை வருமான வரி துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தெரிகிறது. இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை. தேர்தல் நேரத்தில் வருமான வரி துறை அதிகாரிகளின் இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஜனதாதளம்(எஸ்) கட்சியினரை குறிவைத்து இந்த சோதனை நடந்ததாகவும் அக்கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்