ராணுவ வீரர் கொலை வழக்கில் தம்பி உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை தார்வார் ஐகோர்ட்டு தீர்ப்பு

தார்வாரில் நடந்த ராணுவ வீரர் கொலை வழக்கில் தம்பி உள்பட 7 பேருக்கு தார்வார் ஐகோர்ட்டு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Update: 2023-06-21 18:45 GMT

உப்பள்ளி-

தார்வாரில் நடந்த ராணுவ வீரர் கொலை வழக்கில் தம்பி உள்பட 7 பேருக்கு தார்வார் ஐகோர்ட்டு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ராணுவ வீரர் கொலை

தார்வார் மாவட்டம் கல்கட்டகி போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஒன்னஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லிங்கப்பா. இவர் ராணுவ வீரராக பணியாற்றியவர். இவரது தம்பி பசவப்பா. இவர்கள் 2 பேருக்கும் இடையே குடும்ப சொத்துகளை பங்கிடுவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் பசவப்பா, அண்ணன் லிங்கப்பாவை கொலை செய்ய திட்டமிட்டார்.

இதற்காக நண்பர்களின் உதவியை நாடினார். அதன்படி பசவப்பா தனது நண்பர்கள் 6 பேர் சேர்ந்து, கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந் தேதி லிங்கப்பாவை பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி கொலை செய்தார். இந்த கொலை குறித்து கல்கட்டகி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக பசவப்பா, அவரது நண்பர்கள் 6 பேரை கைது செய்தனர்.

விடுதலை

இந்தநிலையில் இந்த வழக்கு விசாரணை தார்வார் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. அப்போது 7 பேர் மீதான குற்றச்சாட்டிற்கு முறையான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ந் தேதி தார்வார் மாவட்ட கோர்ட்டு 7 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் மாவட்ட கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து லிங்கப்பாவின் தந்தை தார்வார் ஐகோர்ட்டில் மேல் முறையீடு  செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில்  நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடைந்தது.

ஆயுள் தண்டனை

அப்போது தீர்ப்பளித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட பசவப்பா உள்பட 7 பேருக்கு தார்வார் மாவட்ட கோர்ட்டு அளித்த தீர்ப்பை தள்ளுப்படி செய்வதுடன், அவர்கள் அனைவருக்கும் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் 7 பேரும் தலா ரூ.34 ஆயிரம் அபராதம் செலுத்தவேண்டும்.

இந்த அபராத தொகையில் தலா ஒரு லட்சம் ரூபாய் கொலை செய்யப்பட்ட லிங்கப்பாவின் தந்தை, தாயிற்கு வழங்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்தநிலையில் நீதிபதியின் இந்த உத்தரவை தொடர்ந்து அவர்கள் 7 பேரும் தார்வார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்