'2024 தேர்தலில் இந்துக்களின் இதய சக்கரவர்த்தியாக மோடியை முன்னிறுத்துவார்கள்' - காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்
ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் என்ன ஆனது? என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவனந்தபுரம்,
2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதனிடையே அடுத்த மாதம் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இது தொடர்பாக திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22-ந்தேதி அயோத்தியில் ராமர் கோவிலையும், பிப்ரவரி 14-ந்தேதி அபுதாபியில் அமைக்கப்பட்டுள்ள இந்துக் கோவிலையும் திறந்து வைக்க உள்ளார். அதன் பிறகு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கிறேன்.
எனவே, விஷயம் தெளிவாக உள்ளது. 2009-ம் ஆண்டில் மோடி இந்திய வாக்காளர்களுக்கு பொருளாதார வளர்ச்சியின் அவதாரமாகவும், குஜராத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் காட்சிப்படுத்தப்பட்டார். அவர் அனைத்து இந்தியர்களுக்கும் வளர்ச்சியை கொண்டு வருவார் என கூறப்பட்டது.
ஆனால் 2019-ம் ஆண்டில், பணமதிப்பிழப்பு என்னும் பேரழிவான நடவடிக்கைக்குப் பிறகு அந்தக் கதை சரிந்த நிலையில், புல்வாமா பயங்கரவாத தாக்குதல், மோடிக்கு பொதுத்தேர்தலை தேசிய பாதுகாப்புத் தேர்தலாக மாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியது.
அடுத்ததாக 2024-ம் ஆண்டில், பா.ஜ.க. நரேந்திர மோடியை இந்துக்களின் இதய சக்கரவர்த்தியாக முன்னிறுத்தும் என்பது தெளிவாகிறது.
இந்த நிலையில் சில கேள்விகள் எழுகின்றன: நீங்கள் இந்தியாவிற்கு செய்தது என்ன? ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் என்ன ஆனது? சமூக-பொருளாதார ஏணியின் கீழ்மட்டத்திற்குப் பயனளிக்கும் பொருளாதார வளர்ச்சி என்ன ஆனது? ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்குகளிலும் செலுத்தக்கூடிய வருமானம் என்ன ஆனது? இந்துத்துவத்திற்கும், மக்கள் நலனுக்கும் இடையே நடக்க இருக்கும் தேர்தலில் இந்தக் கேள்விகள் விவாதிக்கப்பட வேண்டும்."
இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார்.