சிவமொக்காவில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துராகுல்-பிரியங்கா காந்தி இன்று ஒரே மேடையில் பிரசாரம்
சிவமொக்காவில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இன்று ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஒரே மேடையில் பிரசாரம் செய்கிறார்கள்.
சிவமொக்கா-
சிவமொக்காவில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இன்று ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஒரே மேடையில் பிரசாரம் செய்கிறார்கள். இதுபோல் பா.ஜனதாவினருக்காக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
சட்டசபை தேர்தல்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அக்கட்சிகளின் தேசிய தலைவர்களும் கர்நாடகத்தை முற்றுகையிட்டுள்ளனர். அதன்படி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகத்தில் பிரசாரம் செய்தார். அதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கர்நாடகத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் அவர் சாம்ராஜ்நகர் மற்றும் மைசூரு மாவட்டங்களில் பிரசாரம் செய்தார்.
பிரசாரம்
நேற்று அவர் சிக்கமகளூரு மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். இன்று(வியாழக்கிழமை) அவர் சிவமொக்கா மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த தகவலை சிவமொக்கா மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுந்தரேஷ் நிருபர்களிடம் தெரிவித்தார். அதுபோல் ராகுல்காந்தியும் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சிவமொக்காவுக்கு வந்து பிரசார பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தியுடன் கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இதற்காக ராகுல்காந்தி இன்று மதியம் 12.45 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சிவமொக்காவுக்கு வருகிறார். சிவமொக்காவில் நடைபெறும் பிரசார கூட்டத்தை முடித்துக் கொண்டு இருவரும் உடுப்பி மாவட்டத்திற்கு செல்கிறார்கள். அவர்கள் உடுப்பி மாவட்டம் காபுவில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு அம்மாவட்ட காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்கள். இதற்கிடையே அவர்கள் உச்சிலாவுக்கு சென்று மீனவர்களுடன் கலந்துரையாடுகிறார்கள். காடபாடி, மூலூர் ஆகிய பகுதிகளில் பிரமாண்ட ஊர்வலமும் நடத்துகிறார்கள்.
சந்திக்க வாய்ப்பு இல்லை
பாதுகாப்பு காரணங்களுக்காக பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை தொண்டர்கள் உள்பட யாரும் சந்திக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இருப்பினும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் நிருபர்கள் அவர்களை சந்திக்க அனுமதி வழங்க கோரி போலீசாரிடம் கேட்டுள்ளோம் என்று கட்சியின் மாவட்ட தலைவர் சுந்தரேஷ் தெரிவித்துள்ளார்.
இதேபோல் இன்று காலை 9 மணிக்கு பத்ராவதி டவுனில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பா.ஜனதா தலைவரும், கர்நாடக பா.ஜனதா தேர்தல் இணை பொறுப்பாளருமான அண்ணாமலை பிரசாரம் செய்கிறார். காலை 10.30 மணிக்கு சிவமொக்கா என்.இ.எஸ். கல்வி மைதானத்தில் நடைபெறும் பிரசார கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டு பேச இருப்பதாக பா.ஜனதா தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.