சிவமொக்கா சிறையில் பிறந்தநாள் கொண்டாடிய 6 கைதிகள் மீது வழக்கு
சிவமொக்கா சிறையில் பிறந்தநாள் கொண்டாடிய 6 கைதிகள் மீது போலீசார் வழ்க்குப்பதிவு செய்துள்ளனர்.;
சிவமொக்கா-
சிவமொக்கா நகரை ஒட்டிய சோகானேவில் உள்ளது மத்திய சிறைச்சாலை. இங்கு முகமது அலி என்பவர் தண்டனை கைதிகளுக்கான அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் சிறையில் உள்ள தனது சக நண்பர்களுடன் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடினார். இதற்காக சிறையில் உள்ள உணவகத்தில் இருந்து கேக் துண்டுகளை சேகரித்து, அதில் மெழுகு வர்த்தி வைத்து, பிறந்த நாளை முகமது அலி கொண்டாடினார். இந்த பிறந்த நாள் விழாவில் ஷாஹித் பச்சன், சசி பூஜார், சிராஜ், நிஷாக், சச்சின் ஷெட்டி உள்பட 5 பேர் கலந்து கொண்டனர். இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்த தகவல் சிறைத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்தது. இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் முகமது அலி உள்பட 6 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிறையில் கைதிகள் அமர்ந்து சாப்பிடும் அறையில் முகமது அலி கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து முகமது அலி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.