காவலாளியை கார் ஏற்றிக் கொன்ற வழக்கு: தொழில் அதிபருக்கு தூக்கு தண்டனை கோரி கேரள அரசு மேல் முறையீடு
தனிநபர் ஒருவருக்கு மரண தண்டனை வழங்க கோரி மாநில அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வது மிக அரிதான நிகழ்வு என்று கேரள சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம்,
கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் நிஜாம் ( வயது 45). இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி தன்னுடைய வீட்டு காவலாளியான சந்திரபோஸ் என்பவரை கார் ஏற்றிக் கொலை செய்தார். கேட்டை திறக்க தாமதம் ஆனதால் காவலாளியை கார் ஏற்றிக் கொன்ற கொடூர சம்பவத்தில் நிஜாம் ஈடுபட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை விசாரித்த திரிசூர் மாவட்ட நீதிமன்றம் முகம்மது நிஜாமுக்கு 70 லட்சம் அபராதமும் ஆயுள் தண்டனையும் விதித்தது. எனினும், முகம்மது நிஜாமுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கேரள அரசு அம்மாநில ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. கேரள அரசின் மேல் முறையீட்டை நிராகரித்த ஐகோர்ட், முகம்மது நிஜாமுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. இந்த நிலையில், முகம்மது நிஜாமுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.
தனிநபர் ஒருவருக்கு மரண தண்டனை வழங்க கோரி மாநில அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வது மிக அரிதான நிகழ்வு என்று கேரள சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.