பாபநாசம் சினிமா பாணியில் தொழிலாளியை கொன்று வீட்டில் புதைப்பு - நண்பருக்கு போலீசார் வலைவீச்சு
பாபநாசம் சினிமா பாணியில், சங்கனாச்சேரியில் தொழிலாளியை கொன்று வீட்டின் அறையில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆலப்புழா:
ஆலப்புழா மாவட்டம் ஆரியாடு பகுதியை சேர்ந்தவர் பிந்துமோன் (வயது 43). தொழிலாளி. இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் உறவினர்கள் காணவில்லை என்று ஆலப்புழா வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பிந்துமோன் செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்த போது, அவர் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது மோட்டார் சைக்கிள் பூவம் பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. பின்னர் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். காணாமல் போன பிந்துமோனின் நண்பரான சங்கனாச்சேரி அருகே பாயிப்பாட்டு பகுதியை சேர்ந்த முத்துகுமாரிடம் விசாரணை நடத்தினர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். வீட்டின் பின்புறம் உள்ள ஒரு அறையின் தரையில் புதிதாக கான்கிரீட் போடப்பட்டு இருந்தது. சந்தேகத்தின் பேரில், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கான்கிரீட்டை உடைத்து தேடிய போது, பிந்துமோன் உடல் குழி தோண்டி புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே முத்துகுமார் தலைமறைவாகி விட்டார். அவர் நண்பரான பிந்துமோனை கொலை செய்து விட்டு, வீட்டில் குழி தோண்டி புதைத்து உள்ளார். வெளியே தெரியாமல் இருக்க கான்கீரிட் போட்டு மூடி உள்ளார். இந்த கொலை குறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு சணல்குமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மலையாள திரைப்படம் திருஷ்யம் மற்றும் தமிழ் திரைப்படம் பாபநாசம் பாணியிலும் முத்துகுமார் கொலைக்கு பின்னர், அதனை மறைக்க நாடகமாடியது தெரியவந்தது. பிந்துமோன் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தப்பியோடிய முத்துகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.