சாகரில் பள்ளி மாணவி திடீர் சாவு விடுதியை முற்றுகையிட்டு கிராமமக்கள் போராட்டம்

சாகரில் பள்ளி மாணவி திடீர் சாவு விடுதியை முற்றுகையிட்டு கிராமமக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-06-11 18:45 GMT

சிவமொக்கா-

சாகரில் பள்ளி மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி விடுதியை முற்றுகையிட்டு கிராமமக்கள் போராட்டம் நடத்தினர்.

பள்ளி மாணவி

சிவமொக்கா மாவட்டம் சாகர் பகுதியை சேர்ந்தவர் தேஜஸ்வினி (வயது13). இவள் தனது பெற்றோருடன் வசித்து வந்தாள். தேஜஸ்வினி அந்தப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 7-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் நேற்று முன்தினம் தேஜஸ்வினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது, உடனே விடுதி நிர்வாகிகள் அவளை சிகிச்சைக்காக சாகர் அரசு ஆஸ்பத்திரியில்் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேஜஸ்வினி பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்து தேஜஸ்வினியின் பெற்றோருக்கு விடுதி நிர்வாகி தெரிவித்தார்.

தர்ணா போரட்டம்

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து அவர்கள் மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பள்ளியின் விடுதியை முற்றுகையிட்டனர். மாணவி இறந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து பள்ளி மேலாளர் மஞ்சப்பாவிடம் கேள்வி கேட்டனர்.

அதற்கு அவர் சரியான பதிலளிக்க வில்லை. இதனால் ஆவேசம் அடைந்த பெற்றோர் மற்றும் கிராமமக்கள் விடுதியின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சாகர் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விசாரணை

அப்போது அவர்கள், மாணவியின் இறப்புக்கு உரிய விசாரணை நடத்த வேண்டும். பள்ளியின் மேலாளர் மஞ்சப்பாவை கைது செய்ய வேண்டும். பள்ளியின் நிர்வாக அலட்சிய போக்கால் மாணவி இறந்துள்ளார் என போலீசாரிடம் கூறினர். அதற்கு மாணவியின் சாவிற்கான காரணம் என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.

இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து சாகர் புறநகர் போலீசார், சமூகநலத்துறை அதிகாரிகள் பள்ளியின் மேலாளர் மஞ்சப்பாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்