மைசூருவில் ஒரே குடும்பத்தை சோ்ந்த 4 பேர் தற்கொலையில் நால்வர் கைது

மைசூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2023-08-31 18:45 GMT

மைசூரு

காய்கறி வியாபாரி

மைசூரு (மாவட்டம்) டவுன் சாமுண்டி புரத்தை சேர்ந்தவர் மகாதேவசாமி (வயது45). இவர் ஆர்.எம்.சி. யார்டு பகுதியில் காய்கறி கடை வைத்து நடத்தி வந்தார்.

இவரது மனைவி அனிதா (38). இவர்களது மகள்கள் சந்திரகலா(17), தனலட்சுமி (15). இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 24-ந்தேதி மகாதேவசாமி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் மகாதேவசாமி வீட்டின் கதவை தட்டினார்.

ஆனால் கதவை யாரும் திறக்கவில்லை. இதுகுறித்து அவர் கிருஷ்ணராஜா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தற்கொலை 

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு மகாதேவசாமி உள்பட 4 பேரும் பிணமாக கிடந்தனர்.

பின்னர் போலீசார் 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மைசூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் 4 பேரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதற்கிடையே போலீசார், மகாதேவசாமி கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில், பண்டிபாளையம் காய்கறி மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் என்.பி.மஞ்சுநாத், அவரது மனைவி, கோட்டே உண்டி மகாதேவா, பன்னூர் ரவி, கேசட் ரமேஷ் மற்றும் சி.எச். கிரேட் மகாதேவண்ணா ஆகிய 6 பேரிடம் கடன் வாங்கி இருந்தேன்.

ஆனால், அவர்களிடம் வாங்கிய கடனை என்னால் திருப்பி கொடுக்க முடியவில்லை. அவர்கள் 6 பேரும் கடனை திருப்ப கேட்டு தொந்தரவு செய்து வந்தனர்.

4 பேர் கைது

மேலும், அவர்கள் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனால் நான் மனக்கவலையில் இருந்து வந்தேன். இதனால் குடும்பத்துடன் தற்ெகாலை செய்து கொள்கிறேன் என குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே அவர்கள் 6 பேரும் தலைமறைவானார்கள்.

இதுகுறித்து கிருஷ்ணராஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் என்.பி.மஞ்சுநாத், பன்னூர் ரவி, கேசட் ரமேஷ் மற்றும் சி.எச். கிரேட் மகாதேவண்ணா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், மஞ்சுநாத்தின் மனைவி, கோட்டேஉண்டி மகாதேவா ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்