'மூடா'வில் பா.ஜனதா ஆட்சியில் தான் முறைகேடு நடந்துள்ளது- டி.கே.சிவக்குமார்

‘மூடா’வில் பா.ஜனதா ஆட்சியில் தான் முறைகேடு நடந்துள்ளது என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

Update: 2024-07-26 02:22 GMT

பெங்களூரு,

கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவிக்கு வீட்டுமனைகள் ஒதுக்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜனதா ஆட்சியில் தான் இந்த மனைகள் ஒதுக்கப்பட்டன. இதை சட்டசபையில் பா.ஜனதா ஒப்புக்கொண்டு இருக்க வேண்டும். தங்களின் தவறு வெளியே வந்துவிடுமோ என்று அவர்கள் பயப்படுகிறார்கள். வால்மீகி வளர்ச்சி வாரிய முறைகேடு குறித்து சபையில் விரிவாக விவாதம் நடைபெற்றது.

அந்த விவாதத்திற்கு பதிலளிக்க எதிர்க்கட்சிகள் முதல்-மந்திரி சித்தராமையாவை விடவில்லை. தங்களின் தொடர்பு அம்பலமாகிவிடுமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதில் உண்மைகள் வெளிவரும். மூடா முறைகேடு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் எதிா்க்கட்சிகள் தேவையின்றி பிரச்சினை கிளப்புகின்றன. முதல்-மந்திரி சித்தராமையா தவறு செய்துள்ளார் என்பதற்கு பா.ஜனதா ஏதாவது ஆதாரங்களை வழங்க வேண்டும். மூடாவில் ஏதாவது முறைகேடு நடந்திருந்தாலும், அது பா.ஜனதா ஆட்சியில் தான் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது. பா.ஜனதா ஆட்சியின்போது மூடா வீட்டுமனைகள் சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்டது குறித்த பட்டியலை வெளியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்