கல்கட்டகியில் புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் 2 பேர் கைது
கல்கட்டகியில் புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்தது அம்பலமாகி உள்ளது.
உப்பள்ளி-
கல்கட்டகியில் புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்தது அம்பலமாகி உள்ளது.
புதுமாப்பிள்ளை கொலை
தார்வார் மாவட்டம் கல்கட்டகி தாலுகா ஜென்னூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமப்பா அஞ்சுமணி. இவரது மகன் நிங்கப்பா நவலூர் (வயது28). இவர் உப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நிங்கப்பாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்கட்டகி அருகே உள்ள தவரேகெரே கிராமத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் பேசி நிச்சயம் செய்யப்பட்டது.
இவர்களது திருமணம் நாளை (7-ந் தேதி) கல்கட்டகியில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்க இருந்தது. இந்தநிலையில் நிங்கப்பா கடந்த 1-ந் தேதி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் வீட்டின் அருகே உள்ள பண்ணை வீட்டில் தனியாக தூங்க சென்றார். அப்போது பண்ணை வீட்டிற்குள் மர்மகும்பல் புகுந்தது. அவர்கள் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த நிங்காப்பாவின் முகத்தில் மிளகாய் பொடியை வீசி அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்றது.
கள்ளத்தொடர்பு
இதுகுறித்த தகவலின் பேரில் கல்கட்டகி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிங்கப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மகும்பலை வலைவீசி தேடி வந்தனர். மேலும் மர்மகும்பலை பிடிப்பதற்கு கல்கட்டகி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுசலகி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அந்த தனிப்படை போலீசார் மர்மகும்பலை ேதடி வந்தனர். இந்தநிலையில் அதே கிராமத்தை சேர்ந்த முத்தப்பா (32), மற்றும் அவரது சகோதரர் வீரபத்ரப்பா (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதாவது முத்தப்பாவின் மனைவிக்கும், நிங்கப்பாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
2 பேர் சிறையில் அடைப்பு
முத்தப்பா தனது மனைவி மற்றும் நிங்கப்பாவிடம் கள்ளக்காதலை கைவிடும்படி கூறி வந்துள்ளார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. தொடர்ந்து முத்தப்பா மனைவி நிங்கப்பாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் நிங்கப்பாவை கொலை செய்ய முத்தப்பா முடிவு செய்தார். அதன்படி அவர் தனது சகோதரர் வீரபத்ரப்பாவுடன் சேர்ந்து பண்ணை வீட்டில் தூங்கி கொண்டிருந்த நிங்கப்பாவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் என்று போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.