விபத்தில் சிக்கிய தந்தையை கவனிக்க முடியாத துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
விபத்தில் சிக்கிய தந்தையை கவனிக்க முடியாத துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் சிவமொக்காவில் நடந்துள்ளது.
சிவமொக்கா-
விபத்தில் சிக்கிய தந்தையை கவனிக்க முடியாத துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் சிவமொக்காவில் நடந்துள்ளது.
தனியார் நிறுவன ஊழியர்
சிவமொக்கா மாவட்டம் சந்தேகடூர் அருகே ராம்புரா கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜப்பா. இவரது மகன் ராஜு (வயது 35). பசவராஜப்பா அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் அவர் கடந்த 14-ந் தேதி வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் பசவராஜப்பா மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பசவராஜப்பாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை ராஜு ஆஸ்பத்திரியில் இருந்து கவனித்து வந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் மங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ராம்புரா கிராமத்தில் உள்ள வீட்டிற்கு ராஜு வந்தார். அப்போது அவர் தனது அறைக்கு சென்று திடீரென மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சிவமொக்கா டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சிவமொக்கா டவுன் போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் படுகாயம் அடைந்த தந்தையை கவனிக்க முடியாததால் ராஜு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து சிவமொக்கா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் படுகாயம் அடைந்த தந்தையை கவனிக்க முடியாததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.