அரசு அலுவலகங்களில் ஒப்பந்த ஊழியர்களின் நிலை குறித்து விசாரணை-ஐகோர்ட்டு உத்தரவு
அரசு அலுவலகங்களில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்களின் நிலை குறித்து விசாரணை நடத்துவதற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு: அரசு அலுவலகங்களில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்களின் நிலை குறித்து விசாரணை நடத்துவதற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஒப்பந்த ஊழியர் பணி நீக்கம்
கர்நாடகத்தில் விவசாயிகளுக்கு விதைகள் வினியோகம் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சுஜாதா என்ற பெண் ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆபரேட்டராக கடந்த 2007-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி மாற்றம் செய்யப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு ரூ.6,900 மாத சம்பளம் பெற்றார். இதையடுத்து அவர் கூடுதல் சம்பளம் வழங்க கோரி அந்த நிறுவனத்திற்கு விண்ணப்பித்தார். இதையடுத்து அந்த நிறுவனம், அவரை திடீரென பணி நீக்கம் செய்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், தொழிலாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரணைக்கு உத்தரவு
அப்போது அந்த பெண்ணுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வேலைதரக்கோரி பெண்ணும், பணத்தை வழங்க முடியாது என்று கர்நாடக விதை நிறுவனமும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை அரசு நிறுவனங்கள் பணிக்கு எடுக்கும் பட்சத்தில் அவர்களை திடீரென பணி நீக்கம் செய்வது சரிதானா என்றார்.
மேலும் அரசு அலுவலகங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள், அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் உள்பட நிர்வாக பணிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று துறைசார்ந்த அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.