தார்வாரில் இளம்பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது

தார்வாரில் நடந்த இளம்பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் கொலை செய்ததாக அவர் கூறியுள்ளார்.

Update: 2023-06-12 18:45 GMT

உப்பள்ளி-

தார்வாரில் நடந்த இளம்பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் கொலை செய்ததாக அவர் கூறியுள்ளார்.

இளம்பெண் கொலை

தார்வார் மாவட்டம் உப்பள்ளியை அடுத்த கோவனகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் ரூபா சவதத்தி (வயது 35). கடந்த 8-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் ரூபா சவதத்தியை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் தார்வார் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் ரூபா சவதத்தியை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி காலை தார்வார் புறநகர் பகுதியில் உள்ள தனியார் கட்டிடம் அருகே பிணமாக கிடந்தார்.

இதை பார்த்த பொதுமக்கள் தார்வார் புறநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரூபா சவதத்தியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அந்த விசாரணையில் யாரோ ரூபா சவதத்தியை கல்லால் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர்.

கள்ளக்காதல் விவகாரம்

இந்தநிலையில் சம்பவத்தன்று ரூபா சவதத்தி தார்வார் எம்.ஆர்.நகரை சேர்ந்த தொழில் அதிபர் ராகேஷ் (40) என்பவருடன் சென்றதாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து ராகேஷை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது ராகேஷ் கந்துவட்டி தொழில் செய்து வந்தார். இவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூபா சவதத்தின் கணவர், வட்டிக்கு பணம் வாங்கினார்.

இந்த பணத்தை வசூல் செய்ய செல்லும்போது, ரூபா சவதத்திற்கும், ராகேஷிற்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதற்கிடையில் ரூபா சவதத்தி, ராகேஷிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. பணம் கொடுக்கவில்லை என்றால் கள்ளக்காதல் விஷயத்தை வெளியே கூறிவிடுவதாக மிரட்டியுள்ளார்.

கல்லால் தாக்கி கொலை

இதனால் பயந்துபோன ராகேஷ், ரூபா சவதத்தி உயிருடன் இருந்தால் கள்ளக்காதல் விஷயம் வெளியே தெரிந்துவிடும் என்று நினைத்து, அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கடந்த 8-ந் தேதி ரூபா சவதத்தியிடம் தனியாக பேசவேண்டும் என்று, ராகேஷ் காரில் அழைத்து சென்றார்.அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து ரூபா சவதத்தியை, ராகேஷ் கல்லால் தாக்கி கொலை செய்தார் என்று தெரியவந்தது. இதையடுத்து கொலை தொடர்பாக போலீசார் ராகேஷை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்