பெங்களூருவில், கடந்த 15 நாட்களில் 5 கிலோ மீட்டர் தூரம் ராஜகால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்; மாநகராட்சி அதிகாரி தகவல்
பெங்களூருவில், கடந்த 15 நாட்களில் 5 கிலோ மீட்டர் தூர ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பெங்களூரு;
வெள்ளத்தால் பாதிப்பு
பெங்களூருவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பெல்லந்தூர், சர்ஜாப்புரா உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலையில் மழைநீர் தேங்கியதற்கு ஆக்கிரமிப்புகள் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் வருவாய் துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றியது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
5 ஆயிரம் மீட்டர் தூரம்
பெங்களூருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் ராஜ கால்வாயை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. வருவாய் துறை அதிகாரிகள் உதவியுடன் ஆய்வு நடத்தப்பட்டு, பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. பெங்களூருவில் இதுவரை 5 கிலோ மீட்டர் தூர கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு உள்ளது.
குறிப்பாக மகாதேவபுரா, பனந்தூர், வர்த்தூர், முன்னே கொலலே ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளின் பெரும்பகுதி மீட்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் ராஜகால்வாய்கள் மேல்பரப்பில் கட்டப்பட்டு இருந்த வீட்டுச் சுற்றுச்சுவர், வாகன நிறுத்துமிடம் ஆகியவை இடித்து அகற்றப்பட்டது. தற்போது பிறபகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த இடங்களில் மீட்பு பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.