பெங்களூருவில் கிரேன் மோதி படுகாயம் அடைந்த கல்லூரி மாணவி சாவு

பெங்களூருவில், கிரேன் எந்திரம் மோதி படுகாயம் அடைந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Update: 2022-11-04 18:45 GMT

பெங்களூரு:  பெங்களூருவில், கிரேன் எந்திரம் மோதி படுகாயம் அடைந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

கிரேன் மோதி...

பெங்களூரு ஒயில்பீல்டு அருகே கண்ணமங்களா பகுதியை சேர்ந்தவர் ரகுமான் கான். இவரது மகள் நூர் பிசா(வயது 19). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நூர்பிசா வழக்கம்போல் கல்லூரி முடிந்து ஒயில்பீல்டு-ஒசகோட்டை சாலையில் நடந்து சென்றார். அவர் அந்த பகுதியில் உள்ள ஜெயின் பள்ளி அருகே சென்றபோது பின்னால் வந்த கிரேன் எந்திரம் நூர்பிசா மீது மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்த நூர்பிசா உயிருக்கு போராடினார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக மாணவியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 2 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்றும் பலனின்றி நூர்பிசா பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசில் புகார்

மகள் இறப்பிற்கு அலட்சியமாக கிரேனை இயக்கிய டிரைவர் தான் காரணம் என கூறி கிரேன் உரிமையாளர் பெரியசாமி மீது ஒயிட்பீல்டு போக்குவரத்து போலீசில் மாணவியின் தந்தை புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்