சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்தவர் இமாம் உசைன் - பிரதமர் மோடி டுவீட்
நபிகள் நாயகத்தின் பேரன் இமான் உசைன் அவர்களின் தியாகங்களை நினைவுகூரும் நாள், அநீதிக்கு எதிரான போராட்டங்களுக்காக அவர் நினைவுகூரப்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் முகரம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதம் முகரம் என்று அழைக்கப்படுகிறது. முகரம் மாதத்தின் 9 மற்றும் 10 வது நாளில் ஆசுரா என்ற நோன்பை இஸ்லாமியர்கள் கடைபிடிக்கின்றனர்.
ஆசுரா எனப்படும் இந்த நாட்களில்தான் இறைத் தூதரர் மூசா மற்றும் அவரை பின்பற்றிய இஸ்ரவேலர்களை காக்க இறைவன் செங்கடலின் குறுக்கே சுவரை எழுப்பினான் என்று திருக்குர் ஆன் கூறுகிறது. இப்படி பல வரலாற்று சிறப்புமிக்க சம்பவங்கள் இந்த நாளில் நடந்ததாக நம்பப்படுகிறது.
இதற்கு காரணம் ஹஜ்ரத் இமாம் ஹுசைன் அவர்களின் மரணம். இமாம் ஹுசைன் நபிகள் நாயகத்தின் மகள் ஃபாத்திமா மற்றும் மருமகன் அலி தம்பதியின் 2 வது மகனாவார். இவரது ஆதரவாளர்களின் படையினருக்கும் அப்போது ஆட்சியில் இருந்த உமைய்யாக்களின் கலிபா முதலாம் யசீதுக்கும் இடையே கர்பலா என்ற இடத்தில் போர் மூண்டது. இந்த போரில் ஹுசைன் கொல்லப்படுகிறார்.
இஸ்லாமியர்களில் ஷியா என்ற பிரிவு உருவாகுவதற்கு இந்த போர் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கர்பலா போரில் கொல்லப்பட்ட இமாம் ஹுசைன் அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஷியாக்கள் முகரம் அன்று தங்கள் உடல்களில் காயங்களை ஏற்படுத்திக்கொண்டு ஊர்வலம் செல்கின்றனர்.
இந்த நிலையில் முகரம் முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இமாம் ஹுசைனை நினைவுகூர்ந்து டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
அதில், "இன்று ஹஜ்ரத் இமாம் உசைன் அவர்களுடைய தியாகங்களை நினைவுகூரும் நாள். சத்தியத்தின் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் அநீதிக்கு எதிரான போராட்டங்களுக்காக ஹுசைன் நினைவுகூரப்படுகிறார். சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்." என்று பதிவிட்டு உள்ளார்.