புதிய மதுபான ஆலைகள் வந்தால் புதுவையில் மதுபான ஆறுதான் ஓடும் - முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி

புதிய மதுபான ஆலைகள் அமைக்க கோடிக்கணக்கில் பேரம் பேசப்படுவதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.;

Update:2022-07-22 16:35 IST

புதுச்சேரி,

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் 5 மதுபான உற்பத்தி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் மேலும் ஆலைகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தை சேர்ந்த மதுபான ஆலை உரிமையாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு மதுபான ஆலைக்கு அனுமதி தர ரூ.15 கோடி வரை பேரம் பேசப்பட்டு பணம் கைமாறிவிட்டதாக கூறப்படுகிறது.

வெடிகுண்டு வீச்சு

புதுவை மாநிலத்தில் 16 லட்சம் மக்கள் உள்ள நிலையில் இவ்வளவு மதுபான ஆலைகள் தேவைதானா? புதிய மதுபான ஆலைகள் வந்தால் புதுவையில் மதுபான ஆறுதான் ஓடும். ஏற்கனவே புதுவையில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபசாரம் பெருகியுள்ளது. புதிய மதுபான ஆலைக்ள வந்தால் மேலும் சட்டம் ஒழுங்கு சீர்கெடும். புதிய மதுபான ஆலைகளை கொண்டு வந்தால் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்.

புதுவையில் தற்போது தொடர்ந்து குண்டு வெடிக்கிறது. லாஸ்பேட்டையில் எம்.எல்.ஏ. வீட்டின் அருகேயே குண்டு வீசப்பட்டுள்ளது. காவல்துறை, உளவுத்துறை என்ன செய்கிறது? ரவுடிகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஆட்சியாளர்கள் ராஜினாமா செய்துவிட்டு ஓடவேண்டும்.

நாட்கள் எண்ணப்படுகிறது

புதுவையில் பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒரு பஸ் இயக்க ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.35 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்கள். இந்த ஆட்சியில் ஊழலைத்தவிர வேறு ஒன்றுமில்லை. கவர்னர் சூப்பர் முதல்-அமைச்சராகவும், சபாநாயகர், அமைச்சர்கள் என எல்லோரும் முதல்-அமைச்சர்களவும் செயல்படுகின்றனர். முதல்-அமைச்சர் ரங்கசாமி நாற்காலியை மட்டும் பார்க்கிறார். அவரது நாட்கள் எண்ணப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்