காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஏழ்மை ஒழிக்கப்படும் - ப.சிதம்பரம்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடித்தட்டில் உள்ள 50% மக்களின் வளர்ச்சிக்கான நலத்திட்டங்களை மேற்கொள்ளும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-05 08:46 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் நெருங்கிவரும் நிலையில் காங்கிரஸ் இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கை குழுவின் தலைவரான ப. சிதம்பரம் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது,

இந்த தேர்தல் அறிக்கையின் பிரதான அம்சம் நீதி. கடந்த 10 ஆண்டுகளில் அதிலும் குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு வகையான நீதியும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது, பலவீனப்படுத்தப்பட்டிருக்கிறது, சில விஷயங்களில் மறுக்கப்பட்டுள்ளது.

2019 தேர்தலின்போது, மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என எச்சரித்தோமோ அவையெல்லாம் நடந்துள்ளன. இதை சொல்வதற்காக வருந்துகிறேன். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், அரசு அமைப்புகள் பலவீனப்படுத்தப்படும் அல்லது கைப்பற்றப்படும் எனக் கூறினோம். அது நடந்திருக்கிறது. சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும்; பலர் கைது செய்யப்படுவார்கள் எனக் கூறினோம். அதுவும் நடந்தது. எளிய மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் எனக் கூறினோம். அதுவும் நடந்தது.

நரேந்திர மோடி அரசு மீது நான் தொடர்ந்து முன்வைக்கும் குற்றச்சாட்டு, இது பணக்காரர்களுக்கான ஆட்சி என்பதே. நாட்டில் உள்ள ஒரு சதவீத வசதிபடைத்தவர்களுக்காக இந்த அரசு செயல்படுகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடித்தட்டில் உள்ள 50% மக்களின் வளர்ச்சிக்கான நலத்திட்டங்களை மேற்கொள்ளும். தற்போது நாட்டில் 23 கோடி மக்கள் ஏழ்மை நிலையில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும்போது, அடுத்த 10 ஆண்டுகளில் 23 கோடி ஏழைகளையும் ஏழ்மை நிலையில் இருந்து கைதூக்கிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்